அவுஸ்திரேலியாவில் திடீரென மூடப்படும் அகதிகள் முகாம்! தவிக்கும் அகதிகள் –

பப்பு நியூ கினியா தீவு நாட்டில் அகதிகளை தடுத்து வைக்கும் அவுஸ்திரேலிய கடல் கடந்த தடுப்பு முகாம் செயல்படுவது தொடர்பான ஒப்பந்தம் (டிசம்பர் 31)ம் திகதியுடன் முடிவடைந்த நிலையில், அங்கு வைக்கப்பட்டுள்ள அகதிகள் தங்கள் எதிர்காலம் என்னவாகும் என அச்சத்துடன் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

“இங்கு சூழ்நிலை மோசமாக உள்ளது. தடுப்பில் உள்ளவர்கள் குழப்பத்தில் உள்ளார்கள். என்ன நடக்கப் போகிறது என எங்களுக்கு தெரியவில்லை,” என யாசர் ஓமர் எனும் சூடானிய அகதி ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

“நாங்கள் பணயக் கைதிகளாக இருக்கிறோம். எட்டு அல்லது ஒன்பது ஆண்டுகளாக எதுவும் அறியாமல் பப்பு நியூ கினியாவில் கிடக்கின்றோம் என ஓமர் தெரிவித்துள்ளார்.

2016ம் ஆண்டு பப்பு நியூ கினியாவின் மனுஸ் தீவில் செயல்பட்டு வந்த தடுப்பு முகாம் சட்டவிரோதமானது எனக் கூறிய பப்பு நியூ கினியா உச்ச நீதிமன்றம் அம்முகாமை மூட உத்தரவிட்டதை தொடர்ந்து அவுஸ்திரேலியா- பப்பு நியூ கினியா இடையேயான ஒப்பந்த முறிவு ஏற்பட்டிருக்கின்றது.

அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்ற அகதிகளை தடுத்து வைப்பதற்கான இடமாக கடந்த 2013ம் ஆண்டு முதல் ‘பப்பு நியூ கினியா’ செயல்பட்டு வந்தது.

தற்போதைய நிலையில், பப்பு நியூ கினியா தீவில் சுமார் 118க்கும் மேற்பட்ட அகதிகள் வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறான சூழலில், வரும் ஜனவரி 1, 2022 முதல் இந்த கடல் கடந்த தடுப்பில் உள்ளவர்களை நிர்வகிப்பது தொடர்பான முழு முடிவும் பப்பு நியூ கினியா அரசாங்கத்தை பொறுத்தது என அவுஸ்திரேலிய உள்துறையின் பேச்சாளர் குறிப்பிட்டிருக்கின்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews