பூநகரி பிரதேச சபையின் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஆளும் தரப்பினாலேயே இரண்டாவது தடவையாக தோற்கடிப்பு.

பூநகரி பிரதேச சபையின் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஆளும் தரப்பினாலேயே இரண்டாவது தடவையாக தோற்கடிக்கப்பட்டுள்ளது
22ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு கடந்த 23.11.2021 அன்று வாக்கெடுப்பு இடம்பெற்றது. குறித்த பாதீடு 2 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.
இந்த நிலையில் இரண்டாவது பாதீடு இன்றையதினம் சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. இன்றைய தினம் குறித்த பாதீடு 3 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வசமிருந்த பூநகரி பிரதேச சபை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினாலேயே தோற்கடிக்கப்பட்டது. இரண்டாவது வரவு செலவு திட்டத்துடனான பிரதேச சபை அமர்வு பூநகரி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் ஐயம்பிள்ளை தலைமையில் 10 மணிக்கு ஆரம்பமானது. இதன்போது வரவு செலவு திட்டம் சபை வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.
இதன்போது குறித்த வரவு செலவு திட்டத்திற்கு 11 பேர் கொண்ட தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர்களில் தவிசாளர் தவிர்ந்த 10 பேரும் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் ஒருவரும் எதிராக வாக்களித்தனர்.
தவிசாளர் மற்றும் சுதந்திர கட்சி உறுப்பினர்கள் இருவரும், ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் ஒருவரும், சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் நால்வரும் ஆதரவாக வாக்களித்தனர். ஈபிடிபி கட்சி உறுப்பினர் நடுநிலை வகித்திருந்தார்.
இதனால் குறித்த வரவு செலவு திட்டத்தின் இரண்டாவது சமர்ப்பிப்பும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக்கூட்மைப்பினர் அனைத்து வட்டாரங்களிலும் வெற்றி பெற்று 11 ஆசனங்களுடன் ஆட்சி அமைத்தனர். தவிசாளரை பதவி விலகுமாறு பல தடவைகள் ஆளும் தரப்பினரால் கோரிக்கை விடப்பட்ட நிலையில் இன்றைய தினம் குறித்த வரவு செலவு திட்டம் ஆளும் தரப்பினராலேயே தோற்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த விடயம் தொடர்பில் பிரதேச சபை தவிசாளர் ஊடக சந்திப்பின் ஊடாக விளக்கினார். கடந்த காலங்களில் தமிழத் தேசிய கூட்டமைப்பின் வெற்றிக்கு கடுமையாக பாடுபட்டேன். இறுதியாக இடம்பெற்ற தேர்தலில் மாவை சேனாதிராஜாவின் துண்டு பிரசுரங்கள் எனக்கு கொடுக்கப்பட்டது, அதனை வினியுாகிப்பது தொடர்பில் சிறிதரன் எம்பியிடம் கேட்டேன். அதனை குப்பையில் போடுமாறு கூறினார்.
குறித்த தேர்தலில் மூன்று விருப்பு வாக்குகளில் சிறிதரன் எம்பிக்கு ஒன்றையும், மாவை மற்றும் சுமந்திரன் ஆகியுாருக்கும் வழஙங்குமாறு நான் பிரச்சாரம் செய்தேன். அதன் பிரதிபலிப்பே என்னை இன்று தோற்கடித்துள்ளது.
பல்வேறு வகையில் என்னை தூற்றினார்கள். தூசனங்களால் பேசினார்கள். இவை அத்தனையையும் நான் கேட்டு சலித்து போனேன் என அவர் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் வேறு கட்சிகளுடன் இணைந்து பயணிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது உண்மையா என அவரிடம் வினவியபோது,
அவ்வாறு இல்லை. நான் ஒதுங்கிக்கொள்ளப்போகின்றேன் என அவர் குறிப்பிட்டார்.
குறித்த பாதீடு தோற்கடிப்பு தொடர்பில் பிரதி தவிசாளர் ரஞ்சன் ஊடகங்களிற்கு தெரிவிக்கையில்,
தேர்தல் வாக்களிப்பு தொடர்பில் தவிசாளரால் குறிப்பிடப்பட்டது பொய்யானது. அவ்வாறு சிறிதரனுக்கு மாத்திரம் வாக்களிக்குமாறு அழுத்தம் கொடுக்கப்படவில்லை. முதல் வாக்கினை மாவட்டத்தில் உள்ளவருக்கு வழங்குமாறு கேட்டமை உண்மையானது என தெரிவித்தார்.
இந்த பாதீடு தோற்கடிக்கப்பட்டமைக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றவில்லை மற்றும் தனக்கான அதிகாரங்களை துஸ்பிரயோகம் செய்து்ம, அதிகாரங்களை செயலாளருக்கு வழங்கி மக்களிற்கு நெருக்கடிகளை கொடுத்தது உள்ளிட்ட 10 காரணங்களை நாங்கள் குறிப்பிட்டு அறிக்கை தயாரித்திருந்தோம்.
அதனாலேயே இவ்வாறு நாங்கள் பாதீட்டுக்கு எதிராக வாக்களித்து தோற்கடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

Recommended For You

About the Author: admin