வடக்கு – கிழக்கு மாகாணங்களில் மீண்டும் கனமழை! வடமாகாணத்திற்கு நெருக்கமாக வரும் புதிய தாழமுக்கம். நா.பிரதீபராஜா.. |

இலங்கையின் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் புதிய தாழமுக்கம் ஒன்று உருவாவதாக யாழ்.பல்கலைகழக சிரேஸ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா கூறியிருக்கின்றார். 

இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, புதிய தாழமுக்கம் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து எதிர்வரும் 26.11. 2021 வியாழக்கிழமை, 27.11.2021 வெள்ளிக்கிழமை மற்றும் 28.11.2021 சனிக்கிழமைகளில் கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களுக்கு அண்மிக்கும்.

இத்தாழமுக்ககம் எப்போது எங்கே கரையைக் கடக்கும் இது புயலாக மாற்றமடையுமா என்பது தொடர்பாக அடுத்து வரும் சில தினங்களுக்கு பின்னரே உறுதிப்படுத்த முடியும்.

எனவே முன்னர் குறிப்பிட்டதன் படி எதிர்வரும் 24ம் திகதி முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மழை படிப்படியாக அதிகரிக்க தொடங்கும். எனினும் எதிர்வரும் 26 மற்றும் 27 ம் திகதிகளில் மிகக் கனமான மழை கிடைக்க வாய்ப்புள்ளது.

எனவே தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ள அனர்த்தம் தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியமாகும். அத்துடன் 24ம் திகதியில் இருந்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலைமையில் காணப்படும் என்பதனால் எதிர்வரும் 28.11.2021 வரை மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது உகந்தது. அத்தோடு எதிர்வரும் 01.12.2021 புதன்கிழமை மீண்டும் ஒரு தாழமுக்கம் வங்காள விரிகுடா கடற்பகுதியில் உருவாகும் வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: Editor Elukainews