புத்திசாலித்தனமான முறையில் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது – எஸ்.பி.திஸாநாயக்க.

நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ புத்திசாலித்தனமான முறையில் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தை சமர்ப்பித்துள்ளார். வரவு-செலவு திட்டத்தின் பயனை நாட்டு மக்கள் வெகுவிரைவில் முழுமையாக பெறுவார்கள் என்று, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக உலக நாடுகள், பாடசாலைகளை மூடியதால் பெரும்பாலான மாணவர்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில் அரசாங்கம், சுகாதார தரப்பினர், நாட்டு மக்கள் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிடும் ஆலோசனைகளை கருத்திற்கொள்ளாமல் எதிர்தரப்பினர் தான்தோன்றித்தனமாக செயற்படுகிறார்கள்.

கொவிட் தாக்கத்தை கருத்திற்கொண்டு கடந்த இரண்டு வருடங்களாக உலகில் பெரும்பாலான நாடுகள் தொடர்ந்து முடக்கப்பட்டு பாடசாலைகளும் மூடப்பட்டன.

கொரோனா தாக்கத்தை கருத்திற்கொண்டு நாட்டையும் பாடசாலைகளையும் மூடவேண்டாம் என உலக உளவியல் நிபுணர்கள் உலக அரச தலைவர்களிடமும் அரசாங்கங்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

கொவிட் தாக்கத்தின் காரணமாக சுமார் 2 வருட காலமாக எமது நாட்டு மாணவர்களின் கல்வி செயற்பாடுகள் தடைப்பட்டிருந்தன.

புதுவருட கொரோனா கொத்தணி பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து பாடசாலைகள் கட்டம் கட்டமாக திறக்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் கல்வி செயற்பாடுகளில் ஆர்வமாக ஈடுப்படுகிறார்கள். அவ்வாறான நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியினரும் மக்கள் விடுதலை முன்னண்யினரும் போராட்டங்களில் ஈடுபட்டு கொவிட் வைரஸ் பரவலை தீவிரப்படுத்த முயற்சிக்கிறார்கள்.

தேசிய வருமானம் பாதிக்கப்பட்டுள்ள பின்னணியில் 2022ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ மிகவும் புத்திசாலித்தனமான முறையில், நாட்டுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் 2022ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தை சமர்ப்பித்துள்ளார்.

அரச செலவு முகாமைத்துவம், அரச செயற்றிட்ட வினைத்திறன், நிர்மாணிப்புக்களுக்காக மக்களை ஊக்கப்படுத்தல், சமுர்த்தி செயற்றிட்டத்தை அபிவிருத்தி செயற்றிட்டமாக்கல் உள்ளிட்ட பல விடயங்கள் 2022 ஆம் ஆண்டு வரவு-செலவு திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளன. உற்பத்தி பொருளாதாரத்திற்காக பெருமளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தாக்கத்தித்தினால் இறக்குமதி பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அத்தியாவசிய பொருள் உற்பத்திகளுக்கும் பெருமளவில் கேள்வி நிலவுகிறது.

உலக சந்தையில் எரிபொருள், சமையல் எரிவாயு ஆகிய அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வடைந்துள்ளது. இப்பிரச்சினை இலங்கைக்கு மாத்திரம் வரையறுத்ததல்ல. எமது நாட்டில் நீர், எரிவாயு, எரிபொருள் மற்றும் மின்சாரம் ஆகியவை நிவாரண அடிப்படையில் வழங்கப்படுகின்றமை தவறானதாகும்.

பெற்றோலியம், மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் துறை ஆகிய பிரதான துறைகளில் காணப்படும் நட்டம் நாட்டின் அபிவிருத்திக்கு பிரதான தடையாக காணப்படுகிறது என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews