இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகருக்கும் சுரேன் ராகவனுக்கம் இடையில் சந்திப்பு!

இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னனுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை கொழும்பில் உள்ள கனடா இல்லத்தில் இடம்பெற்றது.
இலங்கை – கனடா நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் இம் மாத முற்பகுதியில் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், கனேடிய உயர்ஸ்தானிகருடன் இடம்பெற்ற முதலாவது சந்திப்பு இதுவாகும்.
கனடா உயர்ஸ்தானிகருடனான இச்சந்திப்பில் இரு நாடுகளுக்கிடையில் மேற்கொள்ளுவதற்கு சாத்தியமான அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும், இலங்கையில் கல்வி, விவசாயம் மற்றும் தொழில் நுட்பத் துறை ஆகியவற்றின் அபிவிருத்திக்கு கனடாவிடமிருந்து உதவிகள் பெற்றுக் கொள்வது தொடர்பில் காணப்படும் சாத்தியமான வழிமுறைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
சர்வதேச தரம் வாய்ந்த கனடாவின் தொழிற்கல்வியினை இலங்கை இளையோருக்கு பெற்றுக் கொடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இதன் மூலம் இலங்கையில் தொழில் தகமையுள்ள இளையோரை உருவாக்குவதுடன், கனடா மற்றும் மேற்குலகின் தொழில் சந்தைகளில் இலங்கையின் இளையோர் வாய்ப்புக்களை பெற்றுக் கொள்வதற்கு வழி வகைகளை ஏற்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் இதன்போது குறிப்பிட்டார்.
அத்துடன் புதுப்பிக்கத்தக்க சக்தி தொடர்பில் கனடாவின் உதவிகளை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இந்த சந்திப்பில் கனடா உயர்ஸ்தானிகராலய அரசியல் உத்தியோகத்தர் இந்திராணி ஜயவர்த்தனவும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews