விடுதலைப் புலிகளின் தலைவரது புகைப்பட விவகாரம்: நீதிமன்றத்தில் கடுமையான வாதம்.

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படங்களை பயன்படுத்தும் தெற்கின் சிங்கள, ஆங்கில ஊடகங்கள் மீது எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாத நிலையில், அப்புகைப்படங்களை பயன்படுத்தும் தமிழ் ஊடகங்கள், அதன் பணிப்பாளர்கள் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவது எந்த வகையில் நியாயமானது என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா கொழும்பு நீதிவான் நீதிமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.

புலிகளுக்கு உதவுவதாக கூறி இவ்வாறு தமிழ் ஊடகங்கள் மற்றும் அதன் ஊடகவியலாளர்கள் கைது செய்யப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், இல்லாத புலிகளுக்கு எப்படி உதவ முடியும் எனவும் வினவியுள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் தமிழ் ஊடகவிலாயர்கள் இருவர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு கடந்த 7 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில், அந்த கைதும், தடுப்புக் காவலும் சட்ட விரோதமானது என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவினால் நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் சந்திம லியனகேவுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதன் போதே மேற்படி விடயங்களை ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா வாதத்தின் போது குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்டவர்கள் சார்பில் வாதங்களை ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா சட்டத்தரணி ஆர்னல்ட் பிரியந்தனுடன் மன்றில் ஆஜராகி முன் வைத்தார். இந்த கைது தொடர்பில் கடந்த மார்ச் மாதம் 26ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்திருந்தனர்.

2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் திகதி  யாழ்ப்பணத்தில் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் பின்னர் கொழும்பு பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வு தலைமையகத்திற்கு கொண்டு வரப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பால் கூறப்பட்டது. பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டவர்கள் முகாமில் கடந்த 7 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அவரது கைது சட்ட விரோதமானது. அதாவது பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இந்த கைது நடவடிக்கை, 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தின் 6 ஆவது பிரிவை மீறும் வகையில் அமைந்துள்ளது.

இச்சட்டத்தின் 6 ஆவது பிரிவானது, பொலிஸ் அத்தியட்சர் அல்லது அதற்கு கீழ்ப்படாத தரத்தை உடைய பொலிஸ் அதிகாரி ஒருவரால் அல்லது அவ்வாறான ஒருவரால் எழுத்து மூலம் பொறுப்புச் சாட்டப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் பதவிக்கு கீழ்ப்படாத ஒரு பொலிஸ் அதிகாரியினால் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்படல் வேண்டும் என தெளிவாக கூறுகிறது.

எனினும் இந்த கைது நடவடிக்கை அவ்வாறு நடந்தது அல்ல. அதற்கான எந்த ஆவணங்களும் நீதிமன்றில் இல்லை.

எனவே சட்ட விரோதமாக முன்னெடுக்கப்பட்டுள்ள கைதின் கீழ், அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையும் சட்ட விரோதமானதே என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா வாதிட்டுள்ளார்.

இதனை விட அவர், கடந்த 7 மாதங்களில் இந்த விவகாரத்தில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு தாக்கல் செய்துள்ள இரு அறிக்கைகளில் உள்ள விடயங்களையும் சவாலுக்கு உட்படுத்தினார். கடந்த 7 மாதங்களில் இரு மேலதிக விசாரணை அறிக்கைகள் மட்டுமே மன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில் தடுப்புக் காவல் சந்தேக நபர்கள் செய்த செயலாக கூறப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன? மாவீரர் ஒருவரினுடைய குடும்பத்தாருக்கு வீடு கட்டிக் கொடுத்துள்ளாராம். வீடில்லாத ஒருவருக்கு வீடு கட்டிக் கொடுப்பது குற்றமா? கடந்த ஆண்டுகளில் யுத்ததின் பின்னர் 600 வீடுகளை வடக்கு மக்களுக்காக கட்டிக்கொடுப்பதாக அரசாங்கம் கூறியது.

அவர்கள் ஒரு வீட்டையேனும் கட்டிக்கொடுக்கவில்லை. இவ்வாறான நிலையில் வீடில்லாத ஒருவருக்கு வீட்டினை நிர்மாணித்து கொடுத்தமை தவறானதா? தடுப்புக் காவலில் உள்ள எனது சேவை பெறுநர் செய்த நடவடிக்கை அது மட்டுமல்ல.

(நீதிமன்றுக்கு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் கையொப்பத்துடன் கூடிய ஆவணங்கள் புகைப்படங்களைக் காட்டி ) வீடில்லாதோருக்கு வீடமைத்து கொடுத்தமைக்காக எனது சேவை பெறுநர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால்  பாராட்டப்பட்டுள்ளார்.

அதற்கான ஆவணங்களே இவை. மேலும் 10 வீடுகளை நிர்மாணிக்க அவர் எனது சேவை பெறுநரிடம் உதவியும் கோரியுள்ளார்.

அது மட்டுமல்ல, இந்த புகைப்படத்தை பாருங்கள் ( ஒரு புகைப்படத்தை காட்டினார்) இராணுவ தளபதி ஜெனரால் சவேந்ர சில்வாவிடம் கடந்த 2020 டிசம்பரின் கொவிட் நிலைமைகளை கருத்தில் கொண்டு எனது சேவை பெறுநர் சலவை இயந்திரங்களை கையளிக்கும் படமே இது.

இதனைவிட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல், புத்தர் சிலை ஒன்றினை அமைக்க விகாரை ஒன்றுக்கு உதவி செய்தமை என ஏராளமான சமூகப் பணிகள் அவரால் செய்யப்பட்டுள்ளன. அப்படி இருக்கையில் அவற்றை எல்லாம் ஒதுக்கிவிட்டு, வீடற்ற ஒரு குடும்பத்துக்கு வீடு அமைத்துக் கொடுத்தை தவறாக பார்ப்பதை எப்படி நியாயப்படுத்த முடியும்.

இதனை விட, ஏராளமான புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படங்களை வைத்திருந்ததாக சி.ரி.ஐ.டி.யினர் குற்றம் சுமத்துகின்றனர். முதலில் எனது சேவை பெறுநரான தடுப்புக் காவலில் இருப்பவர் ஒரு ஊடகத்தின் பணிப்பாளர் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். ஊடகங்கள் மீது எந்த வகையிலும் அடக்கு முறைகளை பிரயோகிப்பதை கடுகளவேனும் அனுமதிக்காதவன் நான். ஆனால் இந்த இடத்தில் ஒரு விடயத்தை சுட்டிக்காட்ட வேண்டும்.

தெற்கின் சிங்கள, ஆங்கில ஊடகங்கள் பிரபாகரனின் புகைப்படத்தை பிரசுரிக்கின்றன. அவற்றுக்கு எந்த சிக்கலும் இல்லை. நல்லது. எனினும் வடக்கின் தமிழ் ஊடகங்கள் பிரசுரிக்கும் போது பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் புலிகளுக்கு உதவுவதாக கூறி அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இல்லாத புலிகளுக்கு எப்படி உதவ முடியும்?

வடக்கின் பத்திரிகை ஒன்றுக்கு எதிராக பிரபாகரனின் புகைப்படத்தை பயன்படுத்தியமைக்காக தண்டனை சட்டக் கோவையின் 120 ஆம் அத்தியாயத்தின் கீழ் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

யாழ். நகர மேயருக்கு எதிராகவும் சி.ரி.ஐ.டி. புலிகளின் சீருடையை ஒத்த சீருடையை அறிமுகம் செய்தமை தொடர்பில் அதே சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுத்தது.  முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜேகலா மகேஸ்வரன் விடயத்திலும் அவரின் உரை ஒன்றினை மையப்படுத்தி அதே சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இவற்றின் போதும் புலிகளுக்கு உதவியதாகவே கூறப்பட்டது. தண்டனை சட்டக் கோவையின் 120 ஆம் அத்தியாயத்தின் கீழ் குற்றம் சுமத்தப்படும் போது அது பிணையளிக்கத்தக்க குற்றச்சாட்டு. எனவே அதனை ஓரளவுக்கு நியாயப்படுத்த முடியும்.

எனினும் அதனை ஒத்த குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்ட வேறு பலருக்கு பிணையளிக்க முடியாத பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தி வெறுமனே தடுப்புக் காவலின் கீழ் வைத்திருப்பதை எப்படி நியாயபப்டுத்துவது.

ஒரே நாடு ஒரே சட்டம் என்றார்கள். இன்று அது கேள்விக்குரியாயுள்ளது. பொலிஸார் அளிக்கும் தடுப்புக் காவலுக்கான அனுமதி கோரலில் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்திடுகிறார்.

இதுவே இன்று நடக்கிறது என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா வாதிட்டார். இதன் போது மன்றில் ஆஜராயிருந்த பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் சார்ஜன் அபேசேகர ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசாவின் குற்றச்சாட்டுக்களை மறுப்பதாக கூறினார்.

புலிகளை மீள் உருவாக்க உதவியமைக்காகவே வழக்குடன் தொடர்புபட்டோரை கைது செய்து தடுத்து வைத்து விசாரிப்பதாக தெரிவித்துள்ளார். இந் நிலையில் முன் வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிவான் சந்திம லியனகே, இந்த விவகாரத்தில் நவம்பர் 2 ஆம் திகதி உத்தரவொன்றினை தருவதாக கூறினார்.

Recommended For You

About the Author: Editor Elukainews