18, 19 வயது பிரிவினருக்கு தடுப்பூசி ஏற்றும் பணிகள் 21ம் திகதி ஆரம்பம் – கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்..!

18, 19 வயது பிரிவினருக்கு தடுப்பூசி ஏற்றும் பணிகள் 21ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்றைய தினம் எமது மாவட்டத்தின் கொவிட் நிலவரம் தொடர்பான மாவட்ட மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தில் கொவிட் நிலைமை எவ்வாறு அமைந்துள்ளது என்பது தொடர்பில் ஆராயப்பட்டது.

அந்த வகையில், கிளிநொச்சி மாவட்டத்தில் தொற்றாளர்களுடைய எண்ணிக்கை குறைந்து செல்வதை அவதானிக்க முடிகின்றது. தொடர்ந்துமாக எமது மாவட்டத்தினுடைய மக்கள் தங்களுடைய அன்றாட விடயங்களை செய்கின்றபொழுது  தங்களையும், தங்கள் சார்ந்தவர்களையும், சமூகத்தையும் பாதுகாக்கும் வகையில் செயற்பட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.
அதேவேளை, எதிர்வரும் 21ம் திகதி 200 மாணவர்களிற்கு குறைந்ததான மாணவர் தொகை கொண்ட ஆரம்ப பாடசாலைகளை ஆரம்பிக்கின்ற செயற்பாடு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட இருக்கின்றது.
அந்த வகையில் எமது மாவட்டத்தில் 52 பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. குறித்த 52 பாடசாலைகளையும் ஆரம்பிப்பதற்கு வேண்டியதானமுன்னேற்பாடுகள் தொடர்பாகவும் இன்றைய தினம் ஆராயப்பட்டது.
 அதற்கு ஏற்றதான விடயங்களை கல்வி திணைக்களம் முன்னெடுத்துள்ளது. அதேவேளை குறித்த நாளில் பாடசாலை ஆரம்பிப்பதில் ஏற்படுகின்ற சிக்கல் நிலைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்கு அவ்வந்த பிரதேச செயலாளர்கள் ஊடாக கண்காணிக்கப்பட்ட உடன் நடவடிக்கை எடுக்கப்படும் வகையிலான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களிற்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பான செயற்பாடுகள் இடம்பெறவுள்ளது. 18, 19 வயது மாணவர்களிற்கான தடுப்பூசிகள் வழங்கும் செயற்பாடுகளும் வரும் 21ம் திகதி பாடசாலைகளில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
 கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொழுதுவரை 7057 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகியவர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது 166பேர் நோயாளர்களாக சிகிச்சை பெற்ற வருகின்றனர். நேற்றைய தினம் 14பேர் மாத்திரமே தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். அதேவேளை இறப்பு வீதமும் குறைந்தே காணப்படுகின்றது.
ஒவ்வொரு வயது பிரிவினராக தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. முதலில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களிற்கும், பின்னர் 30 தொடக்கம் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களிற்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் இடம்பெற்று வந்தது.
அந்த வகையில் எமது மாவட்டத்தில் 38428 பேர் தடுப்பூசி ஏற்றாதவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 20 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடையவர்களிற்கான தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகளும் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்றது.
தடுப்பூசி ஏற்றிக்கொள்வதில் அவர்கள் ஆர்வம் இன்மையைதான் அவர்கள் காண்பித்திருக்கின்றார்கள். அதேவேளை 60 வயதுக்கும் மேற்பட்டவர்களும் தடுப்பூசி ஏற்றிக்கொள்வதில் பின்னிக்கின்றார்கள்.
அவ்வாறானவர்களை ஊக்குவித்து அவர்களிற்கான தடுப்பூசிகளை வழங்குவதற்கு பிரதேச செயலாளர்கள் ிகராம மட்டத்திலே வீடு வீடாக சென்று அவர்களை ஊக்கப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கின்றார்கள் என அவர் குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: Editor Elukainews