நான் கடிதம் கொடுத்ததால் 400 பேருக்கு பிரான்ஸ், டென்மார்க், சுவிஸில் குடியுரிமை! சீமான் தகவல்.

தாம் கடிதம் கொடுத்ததால் 400 பேருக்கு பிரான்ஸ், டென்மார்க் மற்றும் சுவிஸ் ஆகிய நாடுகள் குடியுரிமை வழங்குகின்றன என்கிற அதிர்ச்சி தகவலை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பல்வேறு சர்ச்சைகளின் மையமாக இருப்பவர் சீமான். பெரியாரின் மேடைகளில் அரசியல் பயணத்தை தொடங்கிய சீமான், பாஜகவின் குரலாக தமிழகத்தில் பெரியார் சிலைகள் எதற்கு என கேள்வி எழுப்பி அதிர வைத்தார். அதன்பின்னர் பாஜகவின் கே.டி.ராகவன், பாலியல் விவகாரத்தில் சிக்கினார். இது தொடர்பான வீடியோவும் வெளியானது. ஆனால் சீமானோ, யாரும் செய்யாததையா கே.டி.ராகவன் செய்துவிட்டார் என ஆதரவு கொடுத்தார். அப்போதும் சீமான் கடுமையான விமர்சனத்துக்குள்ளானார்.

ராஜீவ் படுகொலை பேச்சு

இதனையடுத்து எப்போதும் போல திராவிட அரசியல் கட்சிகள் குறிப்பாக திமுகவுக்கு எதிராக மட்டும் தமது தீவிர எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறார். அத்துடன் அடிக்கடி ராஜீவ்காந்தி படுகொலையை தமிழர்கள்தான் செய்தனர் என பேசியும் வருகிறார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனே, ராஜீவ்காந்தி படுகொலை தங்கள் மீது போடப்பட்ட அபாண்டமான பழி என கூறிய பின்னரும் கூட சீமானும் அவரது கட்சி நிர்வாகிகளும் ஏன் இப்படி பேச வேண்டும் என்கிற கேள்வி முன்வைக்கப்பட்டு வருகிறது.

மேலும் சீமான் இப்படிப் பேசுவதால் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்கள் விடுதலையாகக் கூடாது என பாஜகவைப் போல நினைக்கிறாரா? என்கிற கேள்வியும் முன்வைக்கப்பட்டது.

சீமானுக்கு கடும் எதிர்ப்பு

இதனால் சீமானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் சென்னை, ஈரோடு என போலீசில் புகார் கொடுத்து வருகின்றனர். 100 நாள் வேலைதிட்டத்தை கடுமையாக சீமான் விமர்சித்திருந்தார். அதை பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை வரவேற்றிருந்தார். இப்படி அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கி வரும் சீமான் இப்போது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒரு தகவலை தெரிவித்திருக்கிறார்.

சீமானின் இந்த பேச்சுதான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

பெரியாரிஸ்டுகள் வேலை

சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சீமான் பேசியதாவது: சீமானையும் மணியரசனையும் திட்டுவதுதான் திராவிடம் என்பது தெரியாமல் போய்விட்டது. இதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. பெரியாரிஸ்டுகளின் வேலையே எங்களை திட்டுவது என்பதாக போய்விட்டது. தேசிய இனங்களின் ஒருங்கிணைப்பை செய்திருக்க வேண்டியது யார்? இன்று கல்வி, மருத்துவ உரிமை என அனைத்தும் போய்விட்டது. எல்லா பொதுச்சொத்துகளும் தனியார் மயமாக்கிவிட்டன.

அகதிகளாகப் போகிறீர்கள்

இங்கிருக்கிற முதல்வர்கள் அனைவரும் சந்தித்து தேசிய இனங்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்கிற நிலையை கொண்டு வந்திருக்க முடியாதா? அவர்கள் ஒருபோதும் செய்ய மாட்டார்கள்.

நம்மை மொழியில் இருந்து வெளியேற்றி நம்மை வரலாற்றில் இருந்து வெளியேற்றி பன்னெடுங்காலமாக இருந்த வழிபாட்டில் இருந்து வெளியேற்றி உழைப்பில் இருந்து வெளியேற்றி- அதுதான் 100 நாள் வேலை திட்டம், அந்த உழைப்புக்கு வேறுநபர்களை திணித்துவிடுவார்கள்.

ஈழத்தில் அடித்துவிரட்டப்பட்ட போது ஏதிலிகளாக, அகதிகளாக அந்த தமிழர்கள் வருவதற்கு ஒரு தாய்நிலமாக தமிழகம் இருந்தது. ஆனால் இந்த நிலத்தில் நாம் அடித்துவிரட்டப்பட்டால் எங்கு செல்வோம் என்கிற எச்சரிக்கை உணர்வு வேண்டும். நாளை நிச்சயம் இது நடக்கும்.

400 பேருக்கு குடியுரிமை

உன் இனத்தை முன்னிறுத்து உன் இடத்தை உறுதி செய். இருக்க இடமற்றவன் அனைத்துலகம் பேச அருகதை அற்றவன். சர்வதேசம், ஆல் இந்தியா என பேசிக் கொண்டிருந்தால் கதைக்கு ஆகாது. உன் இடத்தை நீ உறுதி செய். நிற்க நிலமற்றவன் அனாதை. அடிமை. அவன் அகதி.

எப்படிப்பட்ட நாட்டில் நாம் இருக்கிறோம் பாருங்க.. ஆஸ்திரேலியா அரவணைக்கிறது. ஐரோப்பிய மக்கள் சொந்த தாயக மக்களைப் போல குடியுரிமை வழங்குது. நான் கடிதம் கொடுத்தால் பிரான்ஸ் குடியுரிமை கொடுக்குது.

நான் கடிதம் கொடுத்தால் பிரான்ஸ், டென்மார்க், சுவிஸ் குடியுரிமை கொடுக்கிறது. சிறையில் கைது செய்து வைக்கிறார்கள். அப்புறம் விசா வேண்டும், குடியுரிமை வேண்டும் என்று சொன்னால் அந்த விண்ணப்பத்தில் என்னுடன் அரசியல் பணி செய்கிறார் என கையெழுத்துப் போட்டுக் கொடுத்தால் குடியுரிமை கொடுத்துவிடுகிறார்கள்.

400 பேருக்கு மேல் இதுவரை குடியுரிமை வாங்கி கொடுத்திருக்கிறோம். அந்த மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் 35 ஆண்டுகளாக இங்கே ஈழத் தமிழருக்கு குடியுரிமை தர முடியவில்லை. இவ்வாறு சீமான் கூறினார்.

Recommended For You

About the Author: Editor Elukainews