யாழ்.பருத்தித்துறை கடலில் இந்திய மீனவர்களுடன் மோதல்! பருத்தித்துறை மீனவர்கள் 3 பேர் காயம்.!

யாழ்.பருத்தித்துறை கடற்பகுதிக்குள் நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களுக்கும் பருத்தித்துறை மீனவர்களுக்குமிடையில் இன்று காலை இடம்பெற்ற மோதலில் 3 மீனவர்கள் காயமடைந்துள்ளனர்.

இன்று முற்பகல் 11 மணியளவில் மீன்பிடி நடவடிக்கைக்காக பருத்தித்துறை மீனவர்கள் படகுகளில் சென்றிருக்கின்றனர். இதன்போது வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் இந்திய மீன்பிடி படகுகள் காணப்பட்டிருக்கின்றன.

அதேவேளை பருத்தித்துறை மீனவர்களின் வலைகளும் இந்திய றோலர் படகுகளால் அறுக்கப்பட்டிருக்கின்றன. சம்பவத்தை அடுத்து இரு தரப்புக்கும் இடையில் கை கலப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்போது இந்திய மீனவர்கள் கூரிய ஆயுதங்கள் மற்றும் கற்களால் தாக்குதல் நடத்தியதாகவும் சம்பவத்தின்போது முனை பகுதியைச் சேர்ந்த தீபன், சுரேஸ்குமார், ரவிக்குமார் ஆகிய மீனவர்கள் சிறிய காயங்களுக்கு உள்ளானதாகவும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்திய மீனவர்கள் தாக்குதலுக்கு தயாராக கற்கள் உட்பட்ட பொருட்களை எடுத்துவந்திருந்தாகவும் பருத்தித்துறை மீனவர்கள் தெரிவிக்கின்றனர். மோதல் தீவிரமடைந்த நிலையில் இலங்கை கடற்படையினர் அங்கு சென்றபோது இந்திய மீனவர்கள் தப்பி ஓடிவிட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த பருத்தித்துறை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews