நிலநடுக்கம் பற்றி எச்சரிக்கிறார் யாழ்.பல்கலைக்கழக புவியியற்துறை விரிவுரையாளர்…!

இலங்கையின் அனைத்துப் பகுதிகளும் மிகப் பெரிய புவிநடுக்கத்திற்கான வாய்ப்பைக் கொண்டுள்ளன என்பது நிஜம் என யாழ்.பல்கலைக்கழக புவியியற்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார்.

நேற்றையதினம்(18) இரவு சிறிய அளவிலான நில அதிர்வு உணரப்பட்டதை தொடர்ந்து நில அதிர்வு தொடர்பாக நாகமுத்து பிரதீபராஜா தனது முகப்புத்தக பதிவில் விளக்கியுள்ளார்

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்

இலங்கையின் நிலப்பகுதிகளிலும் இலங்கையை அண்மித்த கடல் பகுதிகளிலும் கடந்த 05 ஆண்டுகளில் 29 நில அதிர்வுகள் அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவை புவி நடுக்க பதிவு கருவியில் குறைந்த அளவுத் திட்டத்தில் ( ரிக்டர்) இருந்தாலும் கூட இவை நாம் ஒரு மிகப்பெரிய புவி நடுக்க வாய்ப்பைக் கொண்டிருக்கின்றோம் என்பதனை வெளிப்படுத்துகின்றன.

பூமி பெரியதும் சிறியதுமான பல கவசத்தகடுகளால் உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கை இந்தோ- அவுஸ்திரேலியா கவசத்தகட்டின் வட மேற்கு பிராந்தியத்தில் அமைந்துள்ளது.

இலங்கையில் அண்மையில் அதிகமாக நிகழும் புவி நடுக்க அதிர்வுகள் இலங்கையின் கீழான கவசத்தகடுகளில்( சிறிய தகடுகள் நிறைய உண்டு) சிறிய அளவிலான மாற்றங்கள்( விலகல், ஒருங்கல்,அமிழ்தல்) ஏற்படுவதை வெளிப்படுத்தியுள்ளன.

இந்த மாற்றங்கள் பெரிதாக அமையும் சந்தர்ப்பத்தில் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய புவிநடுக்கங்கள் இலங்கையில் தோன்றலாம்.

உலகில் முன்னெதிர்வு கூற முடியாத மிகப்பெரும் உயிரழிவுகளை ஏற்படுத்தக்கூடிய இயற்கை அனர்த்தங்களில் புவி நடுக்கம் முதன்மையானது. ஆனால் சிறப்பான விழிப்புணர்வுடன் இருந்தால் ஓரளவு பாதிப்புக்களை குறைக்கலாம்.

இலங்கையில் புவிநடுக்கத்தினை பதிவு செய்யும் புவி நடுக்க பதிவு கருவிகள் கண்டி-பள்ளேகலவிலும்இ அனுராதபுரம்- மிகிந்தலையிலும்இ மட்டக்களப்பிலும் மாத்தறையிலும் உள்ளன. வவுனியாவில் ஏற்பட்ட நில அதிர்வு மிகிந்தலையில் உள்ள புவி நடுக்க பதிவு கருவியில் பதிவாகியிருக்கும்.

எனினும் உத்தியோகபூர்வ அறிவித்தல் இதுவரை வெளியாகவில்லை.

எவ்வாறாயினும் இலங்கையின் அனைத்துப் பகுதிகளும் மிகப் பெரிய புவிநடுக்கத்திற்கான வாய்ப்பைக் கொண்டுள்ளன என்பது நிஜம் என மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews