புத்தளம் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவித்தல்…!

புத்தளம் பிரதேசத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள அனர்த்த நிலைமைகளைத் தொடர்ந்து பல்வேறு சுகாதார பிரச்சனைகள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் காணப்படுவதால் பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புத்தளம் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மற்றும் புத்தளம் நகரசபை என்பனவற்றுடன் இணைந்து அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா புத்தளம் நகர கிளை இந்த வேண்டுகோளை விடுத்துள்ளன.

வயிற்றோட்டம், எலிக்காய்ச்சல் மற்றும் சிரங்கு போன்ற நோய்கள் ஏற்படலாம் எனவும் பொதுமக்கள் இந்த விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை காய்ச்சல், வயிற்றோட்டம், வயிற்று வலி போன்ற நோய்கள் காணப்பட்டால் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலைக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அத்தோடு, முடியுமானவரை கொதித்தாறிய நீரையே அருந்துவதுடன், எப்போதும் நன்கு சமைக்கப்பட்ட உணவுகளை உண்ண வேண்டும் என்றும் முடியுமானவரை வீடுகளில் தயாரித்த உணவுகளை உண்ணுமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.

மேலும் மலசல கூட்டத்திற்கு சென்று வந்தால் சவர்க்காரமிட்டு கைகளை கழுவுவதுடன், உணவுகளை உண்ணு முன்பும் , பின்பும் சவர்க்காரமிட்டு கைகளைக் கழுவுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், வெள்ள நீரால் கிணறுகள் பாதிப்படைந்து இருந்தால் சரியான முறையில் சுத்திகரிப்பு செய்து குளோரின் இட்டு தொற்றுநீக்கம் செய்து பயன்படுத்துமாறும், சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் உடலில் காயங்கள் உள்ளவர்கள் வெள்ளநீர் அல்லது கழிவு நீரில் இறங்குவதையோ விளையாடுவதையோ முடியுமானவரை தவிர்த்துக் கொள்ளுமாறும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், உடலில் காயங்கள் உள்ளவர்கள் குளங்களில் குளிப்பதை தவிர்த்துக் கொள்வதுடன், மலசல கூடங்களை குளோரின் இட்டு நன்கு தொற்று நீக்கம் செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தொடர்ச்சியாக மழை பெய்து வருவால் வீடு, சுற்றுப்புறச் சூழல் என்பவற்றை சுத்தமாக வைத்திருக்குமாறும், டெங்கு நுளம்பு பரவும் இடங்கள் காணப்பட்டால் உடனடியாக அவற்றை சுத்தப்படுத்துமாறும் அறிவிவுறுத்தப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews