‘நடேசனின் கணக்கில் மஹிந்தவிற்காக 7.6 மில்லியன் டொலர்களை செலவிட்டுள்ள சீனா’’.

சீன நிறுவனங்கள் திருக்குமரன் நடேசனின் கணக்குகளின் ஊடாக இலங்கையின் முக்கிய தேர்தல்களுக்கு செலவிட்டுள்ளதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.

பண்டோரா பேப்பர்ஸ் நிதி மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிரூபமா ராஜபக்சவின் கணவரே  நடேசன் என்பது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றில் உரையாற்றிய போது ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க  இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு சில தினங்களுக்கு முன்னதாக நடேசனின் கணக்குகளுக்கு 5.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வைப்பிலிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மாத்தறையில் ஆரம்பிக்கப்பட்ட நில்வலா அபிவிருத்தி திட்டத்திற்காக சீன நிறுவனத்திற்கு தேர்தல் அண்மித்த நாட்களில் நான்காயிரம் மில்லியன் ரூபா பணம் செலுத்தப்பட்டுள்ளது. சீனாவின் சீ.ஏ.எம்.சீ என்ற பொறியியல் நிறுவனத்திற்கு இந்தப் பணம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த சீன நிறுவனம், ஹொங்கொங்கில் இயங்கி வரும் ரெட்ரூத் இன்வெஸ்ட்மன்ட் நிறுவனத்திற்கு பணம் செலுத்தியுள்ளது.

இந்த ரெட்ரூத் நிறுவனத்தின் உரிமையாளர் வேறு யாருமல்ல, நடேசனாவார். இந்த விடயங்கள் பற்றி பேசுவதனால் எதுவும் நடக்கப் போவதில்லை. அது எனக்குத் தெரியும், தற்பொழுது விசாரணைகள் என்பது உண்மையில் என்ன?

எங்களது விசாரணைகள் என்பது உண்மைகளை மூடி மறைத்தல் மற்றும் குற்றவாளிகளை விடுதலை செய்தலாகும். சீன ஹார்பர் நிறுவனம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மானித்துள்ளது.

துறைமுகத்தை நிர்மானிப்பதற்காக 1.3 பில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது. இந்த சீன ஹார்பர் நிறுவனம் 2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி வேட்பாளராக மஹிந்த ராஜபக்சவிற்காக 7.6 மில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்த காசோலைகள் உள்ளிட்ட ஆதாரங்களை நான் சமர்ப்பித்துள்ளேன். இலங்கையில் நடைபெறும் தேர்தல் ஒன்றில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஏன் சீன நிறுவனம் பணம் வழங்குகின்றது என்பதனை நான் தெரிந்து கொள்ள விரும்புகின்றேன்.

நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு ஊழல் மோசடிகளே பிரதான காரணியாகும். நிதி அறிக்கைகளில் எவ்வாறான விடயங்கள் கூறப்பட்டாலும் நாட்டில் ஓர் கறுப்பு பொருளாதாரம் இருக்கின்றது. இந்த கறுப்பு பொருளாதாரத்திற்கு தீர்வு காணாவிட்டால் எவ்வாறான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பித்தாலும் அதில் பயன் இருக்காது என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews