சட்டவிரோதமாக அழிக்கப்பட்ட நூற்றாண்டு கடந்த வேப்பமரம் – அதிகாரிகளும், யாழ்ப்பாண ஆதீனமும் மெளனம்

நூற்றாண்டு கடந்த வேப்பமரம் ஒன்று சட்டவிரோதமாக அழிக்கப்பட்ட நிலையில் அதிகாரிகளும், யாழ்ப்பாண ஆதீனமும் மெளனம் காத்துள்ளது.

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீன வளாகத்திலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த காணியில் அமெரிக்கன் மிசனரிகள் காலத்தில் சுற்று சூழலை பாதுகாக்கும் நோக்குடன் பல்வேறு மரங்கள் நாட்டப்பட்டுள்ளது. 

அப்பகுதிக்கு பொறுப்பாக உள்ள குருவானவர் ஒருவரால், சில மரங்கள் வளாகத்தில் இடையூறாக உள்ளதாக தெரிவித்து கிராம சேவையாளர் ஊடாக அகற்றுவதற்கான அனுமதி கோரப்பட்டு பிரதேச செயலகம் அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த அனுமதியை தவறாக பயன்படுத்தி, அனுமதி வழங்கப்படாத வேம்பு ஒன்று அந்த குருவானவரால் அகற்றப்பட்டுள்ளதுடன், 80,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் கடந்த 30.04.2024 அன்று இடம்பெற்றுள்ளது. அச்சம்பவம் தொடர்பில் அவதானித்த மற்றுமொரு குருவானவர் புகைப்படங்களை எடுத்ததுடன், ஆதீன பொருளாளர் மற்றும் சொத்து பாதுகாப்பு அலுவலரிடம் வினவியுள்ளார்.
ஆயினும், குறித்த சம்பவம் தொடர்பில் தமக்கு தெரியாது என அவர்கள் கூறியதுடன், பேராயரின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குருவானவர், முறையாக அனுமதி பெறப்பட்டே மரம் வெட்டப்பட்டதாகவும், பேராயரும், செயலாளரும் அனுமதித்ததாகவும் கூறுவதுடன், சட்ட ரீதியான அனுமதிகளை காண்பிக்க மறுத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் உடுவில் பிரதேச செயலாளரிடம் வினவியபோது, மரம் வெட்டுவதற்கான அனுமதி கோரப்பட்ட நிலையில் மரங்களை பார்வையிட்ட பின்னர் அனுமதி வழங்கப்பட்டதாகவும், வெட்டப்பட்ட குறித்த மரத்துக்கு அனுமதி கோரப்படவில்லை என்பதுடன், அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்திற்கு வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பு உள்ளிட்ட பகுதியில் பெறுமதியான சொத்துக்கள் உள்ளன.
குறித்த சொத்துக்களை பாதுகாக்க ஒரு உத்தியோகத்தர் நியமிக்கப்படுவதுடன், அசையும் அசையா சொத்துக்கள் தொடர்பில் முன்னெடுக்கும் எந்தவொரு செயற்பாட்டுக்கும் ஆதீன செயற்குழுவின் அனுமதி பெறப்பட வேண்டும் என யாப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த நடைமுறையானது, அனுமதி எடுத்த மற்றும் எடுக்கப்படாத மரங்கள் வெட்டப்பட்டமைக்கு பின்பற்றப்படவில்லை என்பதுடன், சட்ட விரோத செயற்பாடு இது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள வெப்பமான கால நிலையில் மரங்களை வெட்டும் செயற்பாடு தொடர்பில் பொறுப்புவாய்ந்த குறித்த பொது ஸ்தாபனம் நடந்த கொண்டிருக்க வேண்டும் என பலரும் விசனம் வெளியிட்டு வருகின்றனர்.
அனுமதி இன்றி வெட்டப்பட்ட குறித்த சம்பவம் தொடர்பில் அதிகாரிகளும், ஆதீனமும் மௌனம் காப்பதானது எதிர்காலத்தில் குறித்த சட்ட விரோத செயற்பாட்டுக்கு மேலும் வழியமைத்துக் கொடுக்கும் என சுட்டிக்காட்டப்படுகிறது.

Recommended For You

About the Author: Editor Elukainews