உடலியல் தண்டனைகளுக்கு தடை..!

 

நாட்டிலுள்ள அனைத்து துறைகளிலும் உடலியல் தண்டனைகளை விதிப்பதை தடை செய்வதற்காக தண்டனைச் சட்ட கோவை மற்றும் குற்றவியல் வழக்கு கோவைச் சட்டங்களை திருத்தம் செய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விசேட அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஒரு உறுப்பு நாடாக கையொப்பமிட்டுள்ள சிறுவர் சமவாயத்தின் மூலம், ஒரு பிள்ளையின் சிவில், அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பெற்றோர்களின், சட்ட ரீதியான பாதுகாவலர்களின் அல்லது வேறு நபர்களின் பாதுகாப்பின் கீழுள்ள பிள்ளை ஒருவருக்கு பாலியல் துஷ்பிரயோகம் உள்ளிட்ட அனைத்துவித உடலியல் அல்லது உளவியல் வன்முறைகளுக்கு இரையாதல், காயப்படுத்தல், துஷ்பிரயோகப்படுத்தல், புறக்கணித்தல், கவனிக்காது விடல், முறைகேடாகக் கவனித்தல், சுரண்டல்களுக்கு ஆளாக்குதல்  போன்றவற்றிலிருந்து பாதுகாப்பதற்காக பொருத்தமான அனைத்துச் சட்ட ,  நிர்வாக மற்றும் கல்வி ரீதியான  நடவடிக்கைகள் அரச தரப்பினரால் மேற்கொள்ளப்பட வேண்டுமென  சிறுவர் உரிமைகள் தொடர்பான சமுதாயத்தின் 19(1) ஆம் உறுப்புரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வீட்டிலும் மாற்றுப் பாதுகாப்பு பின்னணியிலும், தண்டனை கட்டளைகளை நிறைவேற்றுகின்ற நிறுவனங்கள்  மற்றும்  பாடசாலைகளில்  உடலியல் தண்டனைகளை வழங்குவதற்கு தற்போது காணப்படுகின்ற சட்ட ரீதியான ஏற்பாடுகள் போதுமானளவு இன்மையால், உடலில் தண்டனைகள் உள்ளிட்ட துஷ்பிரயோகங்களுக்கும் வன்முறைகளுக்கும் பிள்ளைகள் அதிகளவில் இரையாகின்ற நிலைமை காணப்படுவதாக சிறுவர் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் குழு இலங்கை தொடர்பாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகளின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், அண்மையில்  ஆசிரியர் ஒருவரால் அடித்து தாக்கப்பட்டமையால் செவிப்புலன் இழந்த மாணவர் ஒருவர் தாக்கல் செய்த அடிப்படை மனித உரிமை மனுவின் உயர் நீதிமன்ற தீர்ப்பின் மூலம், ஆசிரியர் மற்றும் அரசியலமைப்பின் 11 ஆவது உறுப்புரையின் பிரகாரம் உரிமை மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறான  உடலியல் தண்டனைகளை வழங்குவது பிள்ளை ஒருவருக்கு உடலியல் மற்றும் உளவியல் ரீதியாக நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்துமென விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால்  கொடூரமான அல்லது இழிவான உடலியல் மற்றும் உடலியல் அல்லாத தண்டனைகளின் கீழ்  எந்தவொரு செயற்பாட்டையும் உள்ளடக்கும் வகையில் சட்டத் திருத்தத்தை துரிதமாக அறிமுகப்படுத்த வேண்டியுள்ளது.

அதற்கமைய அனைத்துத் துறைகளிலும் உடலியல் தண்டனைகள் விதிப்பதை தடை செய்வதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கி தண்டனைச் சட்டக் கோவை மற்றும் குற்றவியல் வழக்கு கோவைச் சட்டங்களை திருத்தம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி மற்றும்  நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு  அமைச்சர் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews