தமிழர்களின் குரலை மௌனிக்கச் செய்யும் உச்சபட்ட அடக்குமுறை – வலம்புரி ஆசியர் மீதான விசாரணைக்கு யாழ் வடமராட்சி ஊடக இல்லம் கண்டனம்!

வலம்புரி பத்திரிகையில் வெளிவந்த ஆசிரியர் தலையங்கத்தை அடிப்படையாக கொண்டு அப்பத்திரிகையின் பிரதம ஆசிரியர் மீது மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பெயரில் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை தமிழர்களின் குரல்வளையை நெரித்து தமிழர்களின் குரலை மௌனிக்கச் செய்யும் உச்சபட்ச அடக்குமுறையின் வெளிப்பாடாகும்.
இது தொடர்பில் யாழ் வடமராட்சி ஊடக இல்லம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,
தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு இருப்பும் கேள்விக்குறியாக்கப்பட்டு வரும் இன்றைய சூழமைவில் தமிழர்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறைகளையும், நெருக்கடிகளையும் வெளிக்கொணரும் ஒரே வழிமுறையாக ஊடக பரப்பு இருந்து வருகிறது. அதுமாத்திரமல்லாது நீதிகோரும் ஈழத்தமிழர்களது உரிமைக்குரலாகவும் தமிழ் ஊடகங்கள் ஓங்கி ஒலித்துவருகின்றன.
வலம்புரி பத்திரிகையில் எழுதப்பட்ட ஆசிரியர் தலையங்கம் தொடர்பில் பத்திரிகை பிரதம ஆசிரியர் நல்லலையா விஜயசுந்தரம் அவர்கள் மீது வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் உத்தியோகத்தர் ஒருவர் மூலமாக ஆளுநர் சார்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமையும் அதனடிப்படையில் பொலிஸ் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் ஊடக சுதந்திரத்தை கேள்விக்குள்ளாக்கும் செயற்பாடாகும்.
இச் செயற்பாடானது தனியே குறித்த ஒரு பத்திரிகைக்கு எதிரான உரிமை மீறலாக கடந்து சென்றுவிட முடியாது. அத்தனை தமிழ் ஊடகங்களின் குரல்வளையை நெரித்து தமிழர்களின் குரலை மௌனிக்கச் செய்யும் உச்சபட்ச அடக்குமுறையின் வெளிப்பாடாகவே இது அமைந்துள்ளது.
பிரபல ஊடகவியலாளர் ‘தராகி’ சிவராம் அவர்கள் கொழும்பு பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து இனம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு நாடாளுமன்றத்துக்கு அருகில் சடலமாக வீசப்பட்டு இன்றோடு 19 ஆண்டுகள் நிறைவடையும் இந்த தருணத்தில் கூட அதற்கு காரணமானவர்கள் கண்டறியப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை.
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்படுதல், படுகொலை செய்யப்பட்டு சடலமாக வீசப்படுதல், நேரடியாகவே துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலை செய்யப்படுதல் போன்ற வடிவங்களில் தமிழ் ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வந்த அடக்குமுறையானது விசாரணைகள், வழக்குகள் என்ற போர்வையில் இன்றும் தொடர்ந்தவண்ணமேயுள்ளது.
இவ்வாறு உயிர்ப்பலியெடுப்புகள், காணாமல்போகச் செய்தல்கள் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்தவாறே தமிழ் ஊடகத்துறை தமிழ் மக்களின் உரிமைக்குரலாக ஓங்கி ஒலித்து வருகிறது. அதனையும் நசுக்கி தமிழர்களது குரலை மௌனிக்கச் செய்யும் விதமாக ஊடகத்ததுறை மீதான இவ்வாறான தலையீடுகளை நாம் வன்மையாக கண்டிப்பதோடு, இதுபோன்ற அடக்குமுறை செயற்பாடுகள் உடனடியாகவே தடுத்து நிறுத்தப்பட்டு ஊடக சுதந்திரத்தை உறுதிசெய்ய சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் யாழ் வடமராட்சி ஊடக இல்லம் வலியுறுத்துகின்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews