காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் குளிர்காயும் அரசியல்வாதிகள்…! ஈ.பி.டி.பி குற்றச்சாட்டு…!

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் ஒரு சில சுயநல அரசியல்வாதிகள் தமது தேவைகளுக்காக அந்த உறவுகளின் உணர்வுகளை வியாபாரமாக்கி வருவதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப் பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம்(26) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

எமது நாட்டைப் பொறுத்தளவில் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயமென்பது பெரும் பேசுபொருளான ஒரு விடயமாக உள்ளது.

அத்துடன் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவுகளுக்கு நீதியும் பரிகாரமும் கிடைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

ஆனால் பாதிக்கப்பட்ட உறவுகள் அதை நோக்கி சரியாக தமது கோரிக்கைகளை முன்னெடுத்திருந்த போதிலும் ஒரு சில சுயநல அரசியல் வாதிகள் தமது தேவைகளுக்காக அந்த உறவுகளின் உணர்வுகளை வியாபாரமாக்கி விட்டுள்ளதன் வெளிப்பாடே இதுவரை எந்தவொரு தீர்வையும் எட்ட முடியாதிருக்கின்றது.

இதேவேளை சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில், இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் சிறிதளவேனும் முன்னேற்றம் ஏற்படவில்லை என தெரிவித்திருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.

ஆனால் 1983 ஆம் ஆண்டிலிருந்து 2009 வரையான காலப்பகுதிககுள் காணாமல் அக்கப்பட்டவர்களது விடயம் தொடர்பில் இலங்கை அரசு எடுத்துவரும் முயற்சிகளுக்கு உண்மையாகவே பாதிக்கப்பட்ட தரப்பினரிடமிருந்து எத்தகைய ஆதரவு அல்லது ஒத்துழைப்புகள் கிடைத்திருக்கின்றது என்பதே இங்கு பார்க்கப்பட வேண்டிய முக்கிய விடயமாக உள்ளது.

இதேவேளை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நியாயம் கிடைக்கப்பெற வேண்டும் என்பதற்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினாகிய நாம் 1995 களில் அதாவது சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட காலப் பகுதியில், பல்வேறு அழுத்தங்கள் இருந்தபோதிலும் அவற்றை உடைத்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பாதுகாவலர் சங்கத்தை அமைத்து உறவுகளை மீட்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தோம்.

இதேவேளை காணாமல் ஆக்கப்பட்டவர்களது பெற்றோர்கள் இன்றும் தமது பிள்ளைகள் வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் போராட்டங்களையும் கோரிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர். அது அவர்களது உணர்வுடன் கூடிய விடயம்.

ஆனால் அதை கொச்சைப்படுத்தும் வகையில் ஏற்பாட்டுக் குழு அல்லது சங்கம் என்று கூறி அவர்களது கட்டமைப்புக்குள் உள்நுழைந்த சுயநல அரசியல் குழுவினர் அவர்களது வலிகளையும் வேதனைகளையும் தமக்கான அரசியல் வியாபாரத்தின் முதலீடாக்கி வருமானம் ஈட்டும் ஒரு மையப்பொருளாக அந்த போராட்டத்தை திசைவழிமாறச் செய்துவிட்டனர்.

அந்தவகையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவுகளது உணர்வுகளுக்கு மதிப்பளித்து   சுயநலன்களையும் அரசியல் இலாபங்களையும் குறித்த தரப்பினர் கைவிட்டு தீர்வுகளையும் பரிகாரத்தையும் தேடிகொள்ளும் வகையில் அந்த உறவுகளுக்கு ஒத்துழைப்பது அவசியம் எனவும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews