உச்சிவெயிலில் கிரிக்கெட் விளையாடிய இளைஞன் மயங்கி விழுந்து பலி.!

கொளுத்தும் வெயிலில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடியபோது ஒரு இளைஞர் மயங்கி விழுந்து பலியான சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடப்பு ஆண்டில் கோடை வெயில் வழக்கத்தை விட அதிகமாக வீசி வருகிறது. அக்னி நட்சத்திரம் கூட தொடங்காத நிலையில் வெளியே கால் வைக்க முடியாதபடி வெயில் மக்களை வாட்டி வருகிறது. ஆனால் அதேசமயம் பள்ளி, கல்லூரிகளுக்கும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டு விட்டதால், சிறுவர்கள், இளைஞர்கள் வெயிலில் வெளியே சுற்றி வருவதும் அதிகரித்துள்ளது.

கிருஷ்ணகிரியில் ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கோடை விடுமுறையையொட்டி அடிக்கடி கிரிக்கெட் விளையாடி வந்துள்ளனர். அவ்வாறாக நேற்றும் அவர்கள் உச்சி வெயிலில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது முனுசாமி என்ற இளைஞர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை நண்பர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உச்சி வெயிலில் விளையாடிய இளைஞர் திடீரென பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிறுவர்கள், இளைஞர்கள் உச்சி வெயில் நேரங்களில் வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும் என பலரும் அறிவுறுத்தி வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews