தமிழ் பொது வேட்பாளரை களமிறக்கும் பின்புலத்தில் ராஜபக்சக்கள்; புலி புரளியை கிளப்ப சதி..!

தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்கும் நடவடிக்கைகளின் பின்புலத்தில் ராஜபக்சக்கள் இருக்கின்றார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு பொதுவேட்பாளரை நிறுத்தி விட்டு, புலிகள் வந்து விட்டார்கள் என்று புரளியைக் கிளப்புவார்கள். அதன் மூலமாக அரசியல் இலாபமீட்டுவார்கள் என்றும் அவர் கூறினார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தப்படுகின்றபோது அந்த செயற்பாட்டை மையப்படுத்தி தென்னிலங்கை தீவிரவாத, இனவாத சக்திகள் ஒன்றுசேருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. அதுமட்டுமன்றி அவ்வாறு ஒன்று சேரும் தரப்புக்கள் மீண்டும் ஆதிக்கம் செலுத்துகின்ற நிகழ்வுகளும் அரங்கேறலாம்.

குறிப்பாக, தற்போதைய சூழலில் அரசியல் ரீதியாக தோற்றுப்போயிருக்கின்ற ராஜபக்சக்களுக்கு கூட தமிழ் பொதுவேட்பாளர் விடயம் உயிரூட்டும் ஒரு செயலாகக்கூட மாறுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.

ராஜபக்சக்கள் கடந்த காலத்தில் தமிழ் பொதுவேட்பாளர் என்ற விடயத்தினை தங்களுடைய தேர்தல் வெற்றிக்கானதொரு யுக்தியாகக் கையாண்டனர். அதற்காக தமிழர்கள் தரப்பிலிருந்தே ஒருவரை களமிறக்கியும் உள்ளார்கள்.

அவ்வாறு பொதுவேட்பாளரை நிறுத்தி விட்டு, புலிகள் வந்து விட்டார்கள் என்று புரளியைக் கிளப்புவார்கள். அதன் மூலமாக அரசியல் இலாபமீட்டுவார்கள்.

நாடாளுமன்ற தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுவதால் தமிழர் ஒருவரை அவரது வெற்றிக்காக அங்கே கூட போட்டியிடச் செய்தார்கள்.

ஆகவே தமிழ் பொதுவேட்பாளர் என்ற விடயம் பேசப்படுகின்ற நிலையில் அதற்குப் பின்னணியில் ராஜபக்சர்கள் இருக்கின்றார்களா? சிங்கள, இனவாத சக்திகள் இருக்கின்றனவா என்கிற சந்தேகம் எனக்கு இயல்பாகவே வருகின்றது.

அதுமட்டுமன்றி தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற விடயம் எமது மக்களின் அரசியல் ரீதியான முயற்சிகளுக்கு எந்தளவுக்கு பொருத்தமானது என்பதையும் பார்க்க வேண்டியுள்ளது.

எனினும் குறித்த விடயம் சம்பந்தமாக நாம் கட்சியாக இன்னமும் கூடிப்பேசவில்லை. கட்சியாகவே அவ்விடயத்தினை ஆராய்ந்து இறுதித் தீர்மானத்தினை அறிவிப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews