உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்; நாடாளுமன்றத்தில் ஆதாரங்களை சமர்ப்பிக்க மைத்திரிக்கு உத்தரவு

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் நாடாளுமன்றத்தில் முன்வைக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு  தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் 24ஆம் திகதியிலிருந்து நாடாளுமன்றத்தில் இடம்பெறவிருக்கும் உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் குறித்த மூன்று நாள் விவாதத்திலேயே இவ்வாறு ஆதாரங்களை முன்வைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019இல் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட போது அரச தலைவராக இருந்த மைத்திரியின் தகவல்களை அனைவரும் அறிய வேண்டும் என்பதன் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தி இந்த விவாதத்தை கோரியிருந்தது.

இந்த தாக்குதலின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும் என அண்மையில் அவர் கூறியிருந்தது சர்ச்சையை கிளப்பியது.

இதனை தொடர்ந்து, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மைத்திரிபாலவிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகி விளக்கம் அளிக்குமாறு உத்தரவிடப்பட்டது.

இருப்பினும், அவர் அதை ஏற்க மறுத்துள்ளதுடன் குற்றப்புலனாய்வு துறையிடம் அளித்த வாக்குமூலத்தில் அண்டை நாட்டின் பெயரையும் குறிப்பிட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

Recommended For You

About the Author: Editor Elukainews