மெக்சிகோ தூதரகத்திற்குள் புகுந்த ஈக்வடோர் பொலிஸார்

ஈக்வடோர் முன்னாள் துணை அதிபர் ஜோர்க் க்ளாஸை கைது செய்ய, மெக்சிகோ தூதரகத்தில் அத்துமீறி நுழைந்த ஈக்வடோர் பொலிஸாரின்  செயலுக்கு கண்டனம் எழுந்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது

தென் அமெரிக்க நாடான ஈக்வடோரில் ஊழல் வழக்கில் 2 முறை தண்டிக்கப்பட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் துணை அதிபர் ஜோர்க் க்ளாஸ் மெக்சிகோ தூதரகத்தில் தஞ்சமடைந்திருப்பதாக  தகவல் கிடைத்தது.

ஈக்வடோர் நாட்டின் முன்னாள் துணைத் தலைவர் ஜோர்க் கிளாஸ், மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸுக்கு நெருக்கமானவர். இந்நிலையில், ஈக்வடோர் அதிகாரிகளால் ஜார்ஜ் கிளாஸ் தொடர்ந்து துன்புறுத்தலுக்கு ஆளானதால் அவருக்கு மெக்சிகோ இடமளிப்பதாகவும், அவர் பாதுகாப்பாக ஈக்வடோர் வெளியேற வழிவகை செய்ய வேண்டும் என்றும் மெக்சிகோ அரசு ஈக்வடோர் அரசு  வலியுறுத்தியது.

இதற்கு எந்த குற்றவாளியையும் சுதந்திரமாக நடமாட விடமாட்டோம் என ஈக்வடோர் அதிபர் பதிலளித்தார்,

இதையடுத்து ஈக்வடோர் பாதுகாப்புப் படையினர் நேற்று (5) இரவு ஈக்வடார் தலைநகர் குய்டோவில் உள்ள மெக்சிகோ தூதரகத்தை சோதனை செய்து அந்நாட்டின் முன்னாள் துணை அதிபர் ஜோர்க் கிளாஸை கைது செய்தனர்.

இந்நிலையில், மெக்சிகோ தூதரகத்தில் ஈக்வடோர் காவல்துறையினரால் சோதனை நடத்தப்பட்டதை தொடர்ந்து ஈகுவடாருடனான தூதரக உறவை மெக்சிகோ துண்டித்துள்ளது.

இதனிடையே, இந்த தாக்குதலில் மெக்சிகோ தூதரக அதிகாரிகள் பலர் காயமடைந்திருப்பதாக  மெக்சிகோ வெளியுறவுத்துறை அமைச்சர் லிசியா பார்செனா குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதன் மூலம் தூதரக உறவுகள் ஒப்பந்தத்தை ஈக்வடோர் மீறிவிட்டதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இதையடுத்து ஈக்வடோரில் இருந்து மெக்சிகோ அதிகாரிகள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், சர்வதேச நீதிமன்றத்தை மெக்சிகோ நாடப்போவதாகவும் மெக்சிகோ வெளியுறவுத்துறை அமைச்சர் லிசியா பார்செனா தெரிவித்துள்ளார்.

இதே வேளை   ஈக்வடோரின் இந்த நடவடிக்கை சர்வதேச சட்டத்தை மீறும் வகையிலான நடவடிக்கையாகும் என்று மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மனுவேல் லோபெஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மெக்சிகோவின் இறையாண்மை இதன்மூலம் மீறப்பட்டுள்ளது எனவும் இது சர்வாதிகாரத்தனமான நடவடிக்கை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தென் அமெரிக்க நாடான ஈக்வடோரில் நடைபெற்ற தேர்தல் குறித்து மெக்சிகோ அதிபர் விமர்சித்திருந்தார். இதனைத்தொடர்ந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews