கச்சத்தீவினை இந்தியாவின் அரசியல் பிரச்சாரமாக்காதீர்கள்…! அன்னராசா கோரிக்கை…!

கச்சதீவு எங்களுடையது அதனை வைத்து மீனவர் பிரச்சினையை அரசியல் செய்யாதீர்கள் என அகில இலங்கை மீனவ மக்கள் தொழிற் சங்கத்தின் வடமாகாண  இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம்(04)  யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மைய நாட்களிலே இலங்கை,இந்திய மீனவர்களினுடைய பிரச்சினை தொடர்பில் பேசப்பட்டிருந்தும் கூட, தமிழ் நாட்டிலே மக்களவை தேர்தல் வந்த பொழுது கச்சத்தீவு தொடர்பான பிரச்சினை தமிழ்நாட்டை அல்லது இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அனைத்து அரசியல் கட்சிகளும் கச்சத்தீவு தொடர்பான பிரச்சினையை முன்னெடுத்து தங்களினுடைய பிரச்சாரத்தை மேற்கொள்கின்றார்கள்.

வடக்கு கடல் தொழிலாளர்களாகிய எங்களை பொறுத்த அளவிலே கச்சத்தீவு என்பது இலங்கை ஆளுகைக்கு உட்பட்டது. எங்களுக்கு சொந்தமானது. ஆனால் எங்களுடைய பிரச்சினை இரட்டை இழுவைமடி பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்பதுதான் எங்களினுடைய எதிர்பார்ப்பு.

இந்தியாவிலே அல்லது தமிழ் நாட்டில் அந்த மீனவ சமுதாயத்தை தவறான வளிநடத்தலுக்காக கச்சத்தீவுதான் பிரச்சினை என்ற தோற்றப்பாட்டை அரசியல் கட்சிகள் முன்கொண்டு போவது எங்களுக்கு கவலை அளிக்கிறது.

கச்சத்தீவு என்பது நெடுந்தீவுக்கு அண்மித்த பகுதியில் இருக்கிறது. இந்த கச்சத்தீவினை அண்மித்த பகுதியில் மீன் பிடிப்பது தமிழ் நாட்டில் உள்ள மீனவர்கள் மட்டும். ஆனால் காரைநகரில் இருந்து முல்லைத்தீவு வரையான கடல் பகுதியிலே ஏனைய புதுச்சேரி மாநிலம்,நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் இருந்து மீன் பிடிக்கின்ற மீனவர்களும் இழுவைமடித் தொழிலைக் கொண்டு எங்களின் இலங்கை கடல் பகுதியிலே மீன்பிடிக்கின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews