ஜெரோம் பெர்னாண்டோ வெளிநாடு செல்லலாம் – நீதிமன்றம் உத்தரவு!

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பிரசங்கம் செய்த குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தற்போது பிணையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரை  வெளிநாடு செல்வதற்கு அனுமதியளித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 3 நாடுகளில் நடைபெறவுள்ள மத சொற்பொழிவுகளில் பங்கேற்பதற்கே  கோட்டை நீதவான் திலின கமகேவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி போதகர் ஜெரோம் பெர்னாண்டோ சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சந்தேகநபரான போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 26ஆம் திகதி வரை விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையை தற்காலிகமாக நீக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை அவரது போதனைகள் அடங்கிய இறுவட்டுகள் அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்துக்கு அறிவித்தது.

இந்த நிலையில், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews