வட்டுக்கோட்டை இளைஞன் கொலை – பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட மூவர் கைது!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞரொருவரை கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட முவர் யாழ்ப்பாணப் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட காரின் உரிமையாளரான வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 38 வயது மதிக்கத்தக்க பிரதான சந்தேக நபர் ஒட்டி சுட்டான் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

கிளிநொச்சி, வவுனியா என வெவ்வேறு பகுதிகளில் வைத்து மற்றைய இருவரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.

வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த இளைஞன் தனது மனைவியுடன் காரைநகர் பகுதிக்கு சென்று விட்டு , மோட்டார் சைக்கிளில் திரும்பும் வேளை பொன்னாலை பாலத்திற்கு அருகில் உள்ள கடற்படை முகாமிற்கு முன்பாக வைத்து மனைவியுடன் கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பில் முன்னர் கைது செய்யப்பட்ட 06 பேர் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கைதான மூவரையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews