உள்நாட்டு பொறிமுறையின் கீழ் தீர்வு! – ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஜனாதிபதி அறிவிப்பு

உள்நாட்டு பொறிமுறைமையின் கீழ் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அறிவித்துள்ளார். பிராந்திய வலயத்தில் மிகப் பழமையான ஜனநாயகத்தை கொண்ட நாடு இலங்கை என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுடன் சந்திப்பு நடாத்திய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வரலாற்றில் எந்தவொரு காலத்திலும் இலங்கையில் எதேச்சாதிகார, சர்வாதிகார ஆட்சி நிலவியதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டத்தை வழங்குவது குறித்து மீளாய்வு செய்யும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் கால நிர்ணய அடிப்படையிலான தீர்வு வழங்கப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்து மீளாய்வு செய்த விடயங்கள் குறித்த அறிக்கை ஐரோப்பிய ஒன்றியத்தில் சமர்ப்பிக்கப்படும் என பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, பயங்கரவாத தடைச் சட்டத்தை திருத்துவது குறித்து நிறுவப்பட்டுள்ள குழுக்களின் பரிந்துரைக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நீண்ட காலம் யுத்தம் இடம்பெற்ற நிலையில் வடக்கு கிழக்கிலும் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினைக்கு தமிழ் அரசியல் கட்சிகள் புலம்பெயர் தமிழர்கள் மற்றும் அனைத்து புலம்பெயர் சமூகங்களும் ஒன்றிணைந்து ஒர் தீர்வுத் திட்டத்தை எட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். நாட்டில் எவ்வாறான பொருளாதார அபிவிருத்தி எட்டப்பட உள்ளது என்பது குறித்தும் ஜனாதிபதி ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கு விளக்கம் அளித்துள்ளார். மிரிஹானவில் அமைந்துள்ள ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

 

Recommended For You

About the Author: Editor Elukainews