மட்டு பன்குடாவெளி வீடு ஒன்று காட்டு யானையால் சேதம்!

மட்டக்களப்பு செங்கலடி பன்குடாவெளி பகுதியில் புகுந்த யானைகள் அங்கிருந்த வீடு ஒன்றை உடைத்து நாசம் செய்துள்ள நிலையில் வீட்டில் இருந்த குடும்பத்தினர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

செங்கலடி பன்குடாவெளி தளவாய் பகுதியினுள் நுழைந்த காட்டு யானைகளே இவ்வாறு அட்டகாசம் செய்துள்ளது.

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பன்குடாவெளி – தளவாய் பகுதினுள் நேற்றிரவு (22) உட்புகுந்த காட்டு யானைகள் வீடொன்றை சேதப்படுத்தியுள்ளது.

இரவு 12 மணியளவில் நுழைந்த யானைகள் வீட்டின் சுவர், கதவு, வீட்டின் முன் பகுதி உள்ளிட்டவையை உடைத்துள்ளதுடன் , அங்கிருந்த பயன்தரும் வாழை, தென்னை மரங்கள், பயிர்கள், வீட்டின் சுற்று வேலி உள்ளிட்டவையையும் அழித்துள்ளது.

வீட்டில் இருந்த ஆறு மாத குழந்தை உள்ளிட்ட குடும்பத்தினர் சத்தம் கேட்டு ஓடியதால் மயிரிழையில் உயிர் தப்பியதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

தளவாய் பகுதியில் தொடர்ச்சியாக காட்டு யானைத் தொல்லையினால் தாம் பெரிதும் பாதிக்கப்படுவதாக கவலை தெரிவிக்கும் மக்கள் தமது பிரச்சினை குறித்து அதிகாரிகள் பாராமுகமாக உள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து உயிர் தப்பிய பெண் கருத்து தெரிவிக்கும் போது “நேற்று இரவு 12 மணி அளவில் யானை எமது வீட்டில் புகுந்தது, வீட்டினை சேதப்படுத்தி இங்குள்ள உடமைகளையும் சேதமாக்கியது நாங்கள் ஓடி தப்பினோம்.

நாம் மிகவும் சிரமப்பட்டு கஷ்டப்பட்டு கட்டிய வீடு இப்படி ஆகிவிட்டது. அரசாங்கத்தினால் எங்களுக்கு எந்த வித உதவியும் கிடைக்கவில்லை. நாங்கள் இது கஷ்டப்பட்டு கட்டிய வீடு அரசாங்கம் எங்களுக்கு உதவ வேண்டும்.

எங்களுக்கு மின்சார வசதி இல்லை. மின்சாரம் வழங்க முடியாது என்கின்றனர். மின்சாரம் வழங்குவதாக இருந்தால் 2 இலட்சம் கேட்கின்றனர். இல்லை என்றால் மின் இணைப்பு வழங்க முடியாது என தெரிவித்துள்ளனர்“ என்று குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews