ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த இளைஞன்

40 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த அடையாளம் தெரியாத இளைஞன், சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த இளைஞன்  நேற்று  (10) காலையில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தலைநகர் டெல்லியில் உள்ள கேஷோப்பூர் மந்தி பகுதியில் டெல்லி நீர்வளத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமார் 40 அடி ஆழத்திற்கு ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டது. ஆழ்துளை கிணற்றை அதிகாரிகள் முறையாக மூடாமல் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று  அதிகாலை ஒரு மணி அளவில் இந்த ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தை ஒன்று தவறி விழுந்து விட்டதாக மீட்புப் படையினருக்கும், பொலிஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர், உடனடியாக மீட்பு பணிகளை துவக்கினர். அப்போது ஆழ்துளை கிணற்றில் விழுந்தது குழந்தை அல்ல என்பதும், அது இளைஞன் என்பதும் தெரிய வந்தது

அந்த வாலிபர் எவ்வாறு இந்த அலுவலகத்திற்குள் வந்து ஆழ்துளை கிணற்றில் விழுந்தார் என்பது தொடர்பாக பொலிஸார் குழப்பம் அடைந்தனர். இதனிடையே சுமார் 12 மணி நேரத்திற்கு மேலாக மீட்பு படையினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு அந்த வாலிபரை உயிருடன் மீட்க முயற்சி செய்தனர்.

பக்கவாட்டில் குழி ஒன்று தோண்டப்பட்டு அந்த வாலிபரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் மதியம் 3:30 மணி அளவில் குறித்த இளைஞன் ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அந்த இளைஞன் யார், எப்படி இங்கு வந்து தவறி விழுந்தார் என்பது தொடர்பாக பொலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.  திருடுவதற்காக அலுவலகத்துக்குள் நுழைந்த அந்த நபர், ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்து இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews