பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள மக்களின் எஞ்சியுள்ள காணிளும் விடுவிக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ்

பாதுகாப்பு தரப்பினரிடம் மட்டுமல்லாது வன ஜீவராசிகள் மற்றும் வனவிலங்கு திணைக்களத்தின் கீழுள்ள காணிகளும் விரைவில் விடுவிக்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உயர் பாதுகாப்பு வலயமாக பாதுகாப்பு தரப்பினரது கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களின் ஒரு தொகுதி காணி நிலங்கள் உரிமையாளர்களிடம் மீளவும் கையளிக்கும் நிகழ்வு இன்றையதினம்  யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது உரையாற்றுகையிலேயே இவ்வாறு நம்பிக்கை தெரிவித்துள்ள அமைச்சர் மேலும் கூறுகையில்,

முப்படையினரும் மக்களுக்காகத்தான் சேவை செய்கின்றனர் என இங்கு உரையாற்றிய யாழ்ப்பாண மாவட்ட கட்டளை தளபதி தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்திலேயே எனது கருத்து இதுவாகத்தான் இருந்தது.

அதாவது பாதுகாப்பு தரப்பினர் எமது மக்கள் படையாக மக்களுக்கான  படையாக செயற்படுவர் என்றும் செயற்பட வேண்டும் என்ற கருத்தை நான் முன்வைத்திருந்திருக்கின்றேன்.

இதேநேரத்தில் எமது மக்களது இன்னும் பல காணிகள் விடுவிக்கப்பட வேண்டியிருக்கின்றன.

நிச்சயமாக அந்தக் காணிகளும்  விடுவிக்கப்படும். அதாவது காணி விடுவிப்பு என்கின்றபோது முப்படை மற்றும் பொலிசார், வன ஜீவராசிகள் மற்றும் வனவிலங்கு திணைக்களத்தின் கீழுள்ள காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும்.

இதேநேரம் 1985 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்தவாறு காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி தெளிவாக கூறியிருக்கின்றார்.

அதனடிப்படையில் தற்போது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

அதனடிப்படையில் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் இறுதிப்பகுதியில் அவ்வாறான காணிகள் விடுவிக்கப்படும் என்றும் நான் முழு நம்பிக்கையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன். என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews