வெடுக்குநாறிமலையில் அடாவடி! மேலும் இருவர் கைது

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் இன்று ஏற்பட்ட குழப்ப நிலையை தொடர்ந்து மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளரும், சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட அமைப்பாளர் தவபாலன் மற்றும் ஆலய நிர்வாகியான தவச்செல்வன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திர் வழிபாடுகளுக்காக வந்திருந்த பக்தர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த பகுதியில் இடம்பெற்ற அடாவடி நடவடிக்கைகளின் போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மயிரிழையில் உயிர் தப்பியதாக கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பெண்கள் உள்ளிட்ட பலர் காவல்துறையினரால் இழுத்து தள்ளப்பட்டுள்ளதாக அவர் தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவது, “அரசு இயந்திரத்தின் அனுசரணையோடு வெடுக்குநாறிமலையில் பிக்குகள் அடாவடியில் ஈடுபட்டனர்.

இராணுவமும் காவல்துறையினரும் குறித்த பகுதியில் குவிக்கப்பட்டிருந்ததுடன், சப்பாத்துக் கால்களாலுடன் சாமியின் படையல் பொருட்களை சிதறடித்தனர். ஆலயச் சூழலில் அவலக்குரல்களும் அபயக் குரல்களும் கேட்கின்றன.

மக்கள் புரட்சியே காலத்தின் கட்டாயம்!” என அவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews