வீடற்ற அனைத்து குடும்பங்களுக்கும் வீடுகள் வழங்க திட்டம்

கொழும்பு கஜிமாவத்தையில் வசிக்கும் அனைத்து வீடற்ற குடும்பங்களுக்கும் வீடுகளை வழங்கத் தேவையான பணிகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அரசாங்கத்தின் வீடுகள் வழங்கும் கொள்கைகள் மற்றும் அளவுகோல்களுக்கு அமைவாகவே இந்த பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

கொழும்பு கஜிமாவத்தை வீட்டுப் பிரச்சினை தொடர்பில் நேற்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

கொழும்பு மாநகரப் பகுதிக்குள் அரசாங்கத்திற்குச் சொந்தமான, பயன்படுத்தப்படாத கட்டடங்கள் மற்றும் காணிகள் தொடர்பில் ஆராய்ந்து அந்த காணிகளை அபிவிருத்தி செய்து வர்த்தக நடவடிக்கைகளுக்கு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் குறிப்பிட்டுள்ளார்.

அரச துறையின் தலையீட்டுடன் தனியார் முதலீடுகள் ஊடாக இந்த வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அத்துடன், கொழும்பு நகர எல்லையில் தற்போது அமுல்படுத்தப்பட்டு வரும், அரசாங்க வீடமைப்புத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராய்ந்த ஜனாதிபதி, மேலும் வீடமைப்புத் திட்டங்களை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டியதன் அவசியத்தை விளக்கியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews