இலங்கையில் நீண்ட காலம் தங்கியிருக்கு வெளிநாட்டவர்களுக்கு அவசர அறிவிப்பு..!

இலங்கையில் இருக்கும் ரஷ்யர்கள் மற்றும் உக்ரேனியர்கள் விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் நேற்று தெரிவித்தார்.

அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச விசா வசதி நீடிக்கப்பட மாட்டாது எனவும், புதிய வீசாக்களுக்கு விண்ணப்பிப்பதன் மூலம் குடிவரவு விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கூற்றுப்படி, 2022 பெப்ரவரி மாதத்திலிருந்து 300 முதல் 400 ரஷ்யர்கள் மற்றும் உக்ரேனியர்கள் இலங்கையில் தங்கியுள்ளனர்.

கடந்த வாரம், குடிவரவுத் திணைக்களம் சுற்றுலா அமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்றை வெளியிட்டு, இலங்கையில் வசிக்கும் நீண்டகால உக்ரேனிய மற்றும் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளை மார்ச் 7 ஆம் திகதிக்குள் வெளியேறுமாறு அறிவிக்குமாறு கோரியிருந்தது.

ரஷ்யா-உக்ரைன் போர் வெடித்ததையடுத்து சொந்த நாடுகளுக்கான விமானங்கள் நிறுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட உக்ரேனியர்களும் ரஷ்யர்களும் 2022 பிப்ரவரி 28 முதல் இரண்டு ஆண்டுகள் இலவச விசாவின் அடிப்படையில் நீட்டிப்புகள் மற்றும் காலாவதியான சுற்றுலா விசாக்களுக்கு அபராதம் விதிக்கப்படாமல் இலங்கையில் தங்க அனுமதிக்கப்படுவதாக சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய-உக்ரைன் மோதல்கள் தொடர்கின்ற போதிலும், தற்போது ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நேரடி விமான சேவைகள் உள்ளதாகவும், அதேவேளை உக்ரேனியர்களும் இலங்கைக்கு விமானம் மூலம் பிரவேசிப்பதற்கும் வெளியேறுவதற்கும் வசதிகள் உள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மேற்கண்ட வகையைச் சேர்ந்த ரஷ்ய மற்றும் உக்ரேனிய சுற்றுலாப் பயணிகள் இந்த நாட்டை விட்டு வெளியேற 2024/02/23 முதல் 2024/03/07 வரை 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews