தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு தடை…! வழக்கு ஒத்திவைப்பு..!

இலங்கை தமிழரசுக் கட்சியின் 17 ஆவது தேசிய மாநாட்டை நடத்த தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சித்திரை மாதம் 05 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு கடந்த 19 ஆம் திகதி நடைபெறும் என்று கூறப்பட்டிருந்தநிலையில், அதற்குத் தடை விதிக்கக்கோரி யாழ்ப்பாணத்திலும், திருகோணமலையிலும் இருவேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகத் தெரிவில் கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளின் தொடர்ச்சியாகவே இந்தமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினரான பீற்றர் இளஞ்செழியன் யாழ்ப்பாணத்தில்  தாக்கல் செய்திருந்த மனுவில்,தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சோ.சேனாதிராசா, தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், திருகோணமலை மாவட்டக் கிளைத் தலைவர் ச. குகதாசன் மற்றும் குலநாயகம், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரான யோகேஸ்வரன் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

திருகோணமலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளை உறுப்பினர் சந்திரசேகரம் பரா என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews