சாந்தன் அவர்களது மரணத்திற்கு இலங்கை – இந்திய அரசு உட்பட தமிழ் அரசியல் பிரதிநிதிகள் பொறுப்பேற்க வேண்டும் – கோமகன் சீற்றம்

அரசியல் கைதிகளின் இறப்பினை வைத்துக்கொண்டு அரசியல் நடாத்தி உங்களது பிழைப்புகள் நடத்துவதை நிறுத்திக் கொண்டு இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் நிகழாத வகையில் செயற்பட வேண்டும் என குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளர் முருகையா கோமகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 32 ஆண்டுகள் சிறையில் இருந்து இந்திய அரசால் விடுவிக்கப்பட்ட சாந்தன் என்று அழைக்கப்படுகின்ற சுரேந்திரராஜ என்பவர் காலை 7.50 மணியளவில் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இறந்துள்ளார்.
உண்மையில் மிகுந்த கவலையையும் வலியையும் ஏற்படாத்தியுள்ளது இந்த செய்தி. கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் திகதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்குரிய சிகிச்சைகள் பயனளிக்காத பட்சத்தில் அவர் இறந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 2022 ஆம் ஆண்டு சாந்தன் உட்பட ஏழு தமிழர் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருந்தார்கள். அதிலே இலங்கையைச் சேர்ந்த சாந்தன் அவர்கள் நாட்டுக்கு வருவதற்கான ஒழுங்குகள் செய்யப்படாமல் திருச்சி சிறப்பு முகாமில் மீண்டும் அடைக்கப்பட்டிருந்தார்.
அந்த நிலையில் அவர் இலங்கைக்கு வருவதற்குரிய ஒழுங்குகளை இந்திய மத்திய அரசினுடைய சென்னை துணைத் தூதரகம் மேற்கொண்டிருந்தது. ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரை அவர் சென்று மீண்டும் அவர் அங்கு வர வேண்டும் என்ற கால எல்லையும் வழங்கியிருந்தது. ஆனால் அந்தக் கால எல்லை பகுதிக்குள் கூட அவர1 உயிரோடு அவரது வயதான தாயாரை பார்ப்பதற்குரிய சூழல் அமையவில்லை.
எனவே அவர் 32 ஆண்டுகளுக்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டும் கூட அவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகளை எந்த தரப்பும் இதய சுத்தியுடன் எடுக்காததை இது வெட்ட வெளிச்சமாக காட்டி நிற்கின்றது.
இறுதி நேரத்தில் சாந்தன் அவர்கள் இலங்கைக்கு வருவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஜனாதிபதியிடம் அறிக்கைகள் மூலம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட செய்திகள் வெளிவந்தன. ஊடகங்களுடைய செய்திகளுக்கு பின்னர் தான் இவ்வாறான சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இந்த அசண்டயீனமான, அதாவது தமிழ் அரசியல் கைதிகளுடைய விடயங்களில் எந்த விதமான கரிசினையும் இல்லாத ஒரு செயற்பாட்டை மீண்டும் நிரூபித்திருக்கின்றது சாந்தன் அவர்களுடைய மரணம்.
எனவே இனி மரணத்திற்கு பின்னர் நீலி கண்ணீர் வடித்துக் கொண்டு அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு எங்களுடைய அரசியல் தரப்புகள் முட்டி மோதிக் கொண்டிருக்கும். அஞ்சலி செலுத்துவதற்கு தகுதி இருக்கின்றதா என்ற கேள்வி இந்த சந்தர்ப்பத்தில் எழுகின்றது.
அவரை உயிரோடு மீட்டு அவரது தாயாரை பார்க்க ஏற்பாடு செய்ய முடியாத தமிழ் அரசியல் தலைவர்களுக்கோ, தமிழ் மக்கள் பிரதிநிதிகளுக்கோ தகுதி இல்லை என்று தான் கூற வேண்டும். தயவு செய்து அரசியல் கைதிகளின் இறப்பினை வைத்துக்கொண்டு அரசியல் நடத்தி உங்களுடைய பிழைப்புகளை நடத்துவதை நிறுத்திக் கொண்டு, இனிமேற்கொண்டு இவ்வாறான சம்பவங்கள் நிகழாத வரை இதனை பார்க்க வேண்டும்.
எனவே சாந்தன் அவர்களுடைய விடுதலைக்காக தமிழக மக்களுடைய விடுதலைக் குரல்கள் ஒருங்கிணைத்து மேலெழுந்ததன் காரணமாகத்தான் இந்த விடுதலை கிடைத்துள்ளது. ஆனால் தமிழக முதல்வர்கள் குரல் கொடுத்திருந்தாலும் அவரை உயிருடன் எங்களிடத்தில் சேர்க்காததும் வரலாற்றி கவலை அளிக்கின்ற ஒரு விடயமாக தான் இருக்கின்றது.
இலங்கையில் 2009க்கு பின்னர் 11 தமிழ் அரசியல் கைதிகள் இவ்வாறு மருத்துவ சிகிச்சை பலனில்லாமல் அல்லது மருத்துவம் புறக்கணிக்கப்பட்டு சிறைக்குள்ளே சாவினை தழுவினார்கள். அந்த வரிசையில் மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் அரசியல் கைதியான சாந்தன் அவர்கள் கூட இவ்வாறு சாவினை தழுவியுள்ளார்.
சிறைகளில் 29 தமிழ் அரசியல் கைதிகள் மிகுதியாக இருக்கின்றார்கள். அவர்களையும் உயிருடன் விடுதலை செய்வதற்குரிய ஒழுங்குகளை செய்து தர வேண்டும் என்று இந்த நேரத்தில் நாங்கள் வேண்டுகோளை முன் வைக்கின்றோம்.
சாந்தன் அவர்களது மரணத்திற்கு இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்கள் பொறுப்பேற்க வேண்டும். இலங்கையில் பல வகையான வேலை திட்டங்களை இந்திய அரசு நேரடியாகவே மேற்கொண்டு வந்து கொண்டிருக்கின்றது.
எனவே அந்த அடிப்படையில் சாந்தன் அவர்கள் விடுதலைக்கு பின்னர் அவர் இலங்கைக்கு வருவதற்குரிய ஒழுங்குகளையும் செய்து கொடுக்கக் கூடிய சூழல் நிலவி இருக்கின்றது.
அதே நேரத்தில் இங்கே இருக்கின்ற எங்களுடைய தமிழ் அரசியல் பிரதிநிதிகள் இந்தியா சென்று அங்கே உள்ளவர்களை சந்திக்கின்றவேளை பல வகையான தொடர்பாடல்கள் இருந்தும் கூட சாந்தன் அவர்களின் இந்த விடயத்தித்தில் சரியான ஒரு கரிசினையோடு  செயல்படாமல் இருப்பதை காட்டுகிறது. அதனால் தான் இந்த மரணம் சம்பவித்திருக்கின்றது. எனவே இதற்கு எங்களுடைய தமிழ் மக்களுடைய பிரதிநிதிகளும் பொறுப்பேற்க வேண்டும் – என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews