வெற்றிலைக்கேணியில் விபத்து-செய்தி  சேகரிக்க சென்ற ஊடகவியலாளருக்கு பொலிசாரால் அச்சுறுத்தல்

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில் இன்று 23.02.2024 இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதோடு இதனை செய்தி சேகரிக்க சென்ற வடமராட்சி கிழக்கு ஊடகவியலாளரும் கடுமையாக அச்சுறுத்தப்பட்டார்.

வெற்றிலைக்கேணியில் இருந்து மருதங்கேணி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும்,மருதங்கேணியில் இருந்து வெற்றிலைக்கேணி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதிலையே குறித்த விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது.

படுகாயமடைந்த இரு இளைஞர்களும் மருதங்கேணி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதுடன் சம்பவ இடத்திற்கு வருகைதந்த மருதங்கேணி போக்குவரத்து பொலிசார் விபத்து தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டிருந்தவேளை சம்பவ இடத்திற்கு மருதங்கேணி பொலிசாரும் சிவில் உடையில் வந்திருந்தனர்.

சம்பவம் அறிந்து செய்தி சேகரிக்க சென்ற வடமராட்சி கிழக்கு ஊடகவியலாளரை செய்தி சேகரிக்க விடாது சிவில் உடையில் வந்த பொலிசார் தடுத்ததுடன் ஊடக அட்டை,மோட்டார்சைக்கிள் பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டு மீண்டும் ஒப்படைக்கப்பட்டதுடன் மிரட்டப்பட்டும் அனுப்பப்பட்டார்.

குறித்த ஊடகவியலாளரை பணி செய்ய விடாது தடுத்து அச்சுறுத்திய பொலிசார் தொடர்பில் மருதங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews