மன்னாரில் பரபரப்பு-விவசாயி மீது துப்பாக்கி சூடு

மன்னார் உயிலங்குளம் பகுதியில் இன்று(19) காலை நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் முன்னெடுக்கப்பட்ட நிலையில்,குறித்த கிராம மக்கள் குறித்த வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

இன்று(19) காலை 8.30 மணியளவில் நொச்சிக்குளத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது கிராமத்தில் உள்ள தனது வயலில் நீர் பாய்ச்சிக் கொண்டு இருந்த வேளையில் ஒரு மோட்டார் சைக்கிளில்  வந்த இரு நபர்கள் ரி-56 ரக  துப்பாக்கி மூலம் அந்த விவசாயி மீது துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட நிலையில் அவர் மயிரிழையில் உயிர் தப்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில மாதங்களாக இந்த கிராமத்து மக்களின் மீது ஒரு குழுவினர் தாக்குதல் நடத்தி இதுவரை மூவர் உயிரிழந்துள்ளதாக அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த கிராமத்துக்கு பொலிஸ் காவல் போடப்பட்டும் அதையும் மீறி  குறித்த சம்பவம் தொடர்வதாகவும், இன்றைய தினம் நடைபெற்ற சம்பவத்தை கண்டித்தும் நொச்சிக்குளம் கிராம மக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

‘கொலைகாரர்களுக்கு ஆயுதம் கொடுத்தது யார்?’ ‘எங்களை பாதுகாப்பது அரசின் கடமை’ ‘எங்கள் உயிருக்கு பாதுகாப்பு தாருங்கள்’ எங்கள் மக்களுக்கு நீதி இல்லையா? யார் தருவது’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews