தேசிய ரீதியில் சாதனை புரிந்த வடக்கு மாகாண விளையாட்டு வீரர்களுக்கு கௌரவிப்பு!

தேசிய ரீதியில் நடைபெற்ற மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகளில் சாதனை புரிந்த வடக்கு மாகாண வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு நேற்றிரவு யாழ்ப்பாணம் – சுதுமலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.
நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்களுக்கு மாலை அணிவித்து, மங்கல இசை வாத்தியங்கள் முழங்க அவர்கள் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் வைபவம் இடம்பெற்று, இரண்டு நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்டது.
பின்னர் வரவேற்பு நடனம் இடம்பெற்றதைத் தொடர்ந்து விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றன. அத்துடன் இளைஞர் யுவதிகளின் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. பின்னர் தேசிய ரீதியில் சாதனை புரிந்த வடக்கு மாகாண இளைஞர் யுவதிகள் கௌரவிக்கப்பட்டனர்.
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்த நிகழ்வில், சிறப்பு விருந்தினராக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் பசிந்து குணவர்தன, யாழ்ப்பாண இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் வினோதினி சிறிமேனன், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர்கள், இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர்கள், இளைஞர் யுவதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews