உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை –

ஆப்கானிஸ்தான் சுகாதாரத்துறை செயல்முறை சரிவின் விளிம்பில் இருக்கிறது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கேப்ரியாசிஸ் எச்சரித்துள்ளார்.
ஐ.நா. உறுப்பினர்கள், உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதிகள், அலுவலர்கள் அனைவரும் காபூல் சென்று தலிபான் தீவிரவாத அமைப்பின் மூத்த உறுப்பினர்களைச் சந்தித்து ஆலோசித்தனர்.
இந்த ஆலோசனைக்குப் பின் ஆப்கானிஸ்தான் சுகாதாரத்துறைக்கு உடனடியாக 4.5 கோடி அமெரிக்க டாலர்கள் உதவி வழங்கப்படும் என ஐ.நா. மனிதநேய அலுவலர் மார்டின் கிரிபித் அறிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள சுகாதாரத்துறை நிலை குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கேப்ரியாசிஸ் கூறியதாவது:
”ஆப்கானிஸ்தானைத் தலிபான்கள் கைப்பற்றியபின் சர்வதேச உதவிகள் நிறுத்தப்பட்டன. இதன்பின், யார் உயிரைக் காப்பாற்றுவது யார் உயிரைக் காப்பாற்றாமல் விடுவது என்பதை அந்நாட்டு சுகாதாரத்துறை முடிவெடுக்கத் தள்ளப்பட்டனர். ஆப்கானிஸ்தான் சுகாதாரத்துறை சீர்குலையும் விளிம்பில் இருக்கிறது.
அவசரமான முடிவுகள் எடுக்காவிட்டால், உடனடியாக மனிதப் பேரழிவைச் சந்திக்கும்.
நாங்கள் ஆப்கானிஸ்தானுக்குச் சென்றதன் மூலம் அங்குள்ள மக்களுக்கு உடனடித் தேவை என்ன என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது, நிர்வாகத்தினரிடமும் பேசி, உடனடியாக சுகாதார வசதிகளை மேம்படுத்தத் தேவையானவை என்ன என்பதையும் அறியமுடிந்தது.
ஆப்கானிஸ்தானுக்குப் போதுமான உதவிகள் இல்லாததால், மிகப்பெரிய சுகாதார திட்டங்கள் கிடப்பில் இருக்கின்றன. மருந்துகளை வாங்க முடியாமலும், ஊதியம் வழங்க முடியாமலும் சுகாதாரத்துறை ஸ்தம்பித்துள்ளது.
சுகாதாரத்துறையில் ஏற்பட்ட இந்தத் தடையால், மக்களுக்குக் கிடைக்கக்கூடிய அடிப்படை சுகாதார வசதிகள், அவசரகால உதவிகள், போலியோ ஒழிப்பு, கரோனா தடுப்பூசி செலுத்தும் முயற்சி போன்றவை பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
ஆப்கனில் இதுவரை 37 கரோனா மருத்துவமனைகளில் 9 மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன. கரோனா தடுப்பு வழிமுறைகள் பெரும்பாலும் ஆப்கனில் கடைப்பிடிக்கப்படவில்லை. பரிசோதனை, தடுப்பூசி செலுத்துவது குறைந்துவிட்டது.
தலிபான்கள் அமைத்துள்ள இடைக்கால அரசில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும். கல்வி, சுகாதாரத்துறை, சுகாதாரப் பணிகள் ஆகியவற்றில் பெண்களை ஈடுபடுத்துவது அவசியம். ஆப்கனின் பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம், சுகாதாரத்துறையை மேம்படுத்தத் தொடர்ந்து உலக சுகாதார அமைப்பு உதவும். ஆப்கனில் முதலீடு செய்யவும் பிற நாடுகளிடம் கோரப்படும்”.இவ்வாறு டெட்ராஸ் அதானம் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews