அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் புதிய கொடுப்பனவு : அதிகரிக்கப்பட்டுள்ள வரி

அரச உத்தியோகத்தர்களுக்கான வாழ்வாதாரக் கொடுப்பனவை வழங்குவதாகக் கூறிக் கொண்டு, மறுபுறம் வட் வரியை 18 சதவீதமாக அதிகரித்துள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

எதிர்கால திட்டமிடல் அற்ற வரவு – செலவு திட்டமே முன்வைக்கப்பட்டுள்ளது. ஜனவரி முதல் மேலும் சில வரிகளை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகவுள்ளது. அவை வரவு – செலவு திட்டத்தில் உள்வாங்கப்படவில்லை.

ஒருபுறம் அரச உத்தியோகத்தர்களுக்கான வாழ்வாதாரக் கொடுப்பனவை வழங்குவதாகக் கூறிக் கொண்டு, மறுபுறம் வட் வரியை 18 சதவீதமாக அதிகரித்துள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உலகம் சுற்றிக் கொண்டிருக்கும் போது, நாட்டில் நாளுக்கு நாள் பிரச்சினைகள் அதிகரித்துச் செல்கின்றன. அரசியலமைப்பு பேரவை சார் செயற்பாடுகளில் சபாநாயகர் பக்க சார்பாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

நாடாளுமன்றத்தில் கூட நியாயம் நிலைநாட்டப்படாத போது, நாட்டில் எவ்வாறு மக்களுக்கு நியாயம் வழங்கப்படும்? ஜனாதிபதியும், ஜனாதிபதியின் சகாக்களும் நாடாளுமன்றத்தையோ சட்டத்துறையையோ மதிப்பதில்லை.

விக்ரமசிங்க – ராஜபக்ச ஆட்சி மக்கள் மத்தியில் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தலும் பொதுத் தேர்தலும் இடம்பெறும் என்று ஜனாதிபதி அறிவிக்கின்றார்.

ஜனாதிபதி பதவிக்கு அப்பால் தேர்தல் ஆணையாளராகவும் அவர் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். தேர்தல் தொடர்பில் அறிவிக்கும் உரிமை ஜனாதிபதிக்கு கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews