உலகில்  தமிழன் இருக்கும் வரை வரை மாவீரர்களின் தியாகம் போற்றப்படும் – யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் விஜயகுமார்..!

உலகில் ஒற்றைத் தமிழன் இருக்கும் வரை மாவீரர்களின் தியாகம் போற்றப்படும் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் அழகராசா விஜயகுமார் தெரிவித்தார்.
இன்று திங்கட்கிழமை மாவீரர் தின இறுதிநாள் தொடர்பில் இந்திய மின் இதழ் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் நவம்பர் 27 மாவீரர் நாள்.
சிங்கள தேசத்தின் ஆக்கிரமிப்பில் இருந்து தமிழர்கள் விடுதலை பெற்று தமிழர்களுக்கு என்று ஒரு தேசம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தங்கள் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்களை நினைவு கூருவதற்காக தாயகம், தமிழகம் உள்ளிட்ட உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளிலும் பரந்து வாழும் தமிழர்கள் உணர்வழிச்சியுடன் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழர் தாயகத்தில் சிறீலங்கா பேரினவாத அரசு எப்படியாவது மாவீரர் நாளை திட்டமிட்டு முடக்க வேண்டும் என்பதற்காக மாவீரர்
நாள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை அச்சுறுத்துவதில்
தனது இனவழிபு காவல்துறையை தீவிரமாக களமிறக்கியுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை குறித்து
எமது செய்திப் பிரிவுக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் விஜயகுமார்  கருத்து தெரிவிக்கையில்.
ஜ.நாவில் இலங்கை குறித்து 2015 இல் கொண்டுவரப்பட்ட 30/1 தீர்மானத்தை இலங்கை அரசு ஏற்றுக்கொண்டு தீர்மானத்தை தாம் முழுமையாக நடைமுறைப் படுத்துவதாக ஐ.நா மனித உரிமை ஆணையத்திடம் ஒப்புதல் வழங்கியிருந்தது.
இந்தத் தீர்மானத்தின் பிரகாரம் நிலைமாறுகால நீதியின் வழியே இழப்பீட்டு உரிமை என்பதற்குள் நினைவேந்தல் உரிமையை ஏற்றுக் கொள்வதாக இலங்கை அரசு ஒப்புக்கொண்டது .
அவ்வாறு இருக்கும்போது தற்போது
தமிழ் மக்களின் மாவீரர் நாள் நினைவேந்தல் உரிமையை சிறீலங்கா அரசு நீதிமன்றங்களின் ஊடாகவும் தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதும் மாவீரர் நாள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை அச்சுறுத்தம் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதானது சிறீலங்கா அரசு தானே ஒப்புக்கொண்ட ஐ.நா தீர்மானத்தை மீறும் செயலாகும்.
அரசின் இத்தகைய நடவடிக்கையானது அரசு கூறும் நல்லிணக்கத்தை எப்படி புரிந்து கொள்வது என்று மாணவர்களாகிய நாங்களே குழப்பத்தில் இருக்கின்றோம்.
 இலங்கை அரசின் இந்த நடவடிக்கை தமிழர்களை மட்டுமல்ல
ஐ.நா உள்ளிட்ட பன்னாட்டு சமூகத்தையும் ஏமாற்றும் செயலாகும்.
எம்மைப் பொறுத்தவரை இறந்தவர்களை இறைவனுக்கு நிகராக வழிபடும் மரபு வழியில் வந்தவர்கள் நாங்கள் அந்த வகையில் எமது உரிமைகளுக்காக தங்கள் உயிர்களைத் தியாகம் செய்த ஒவ்வொரு மாவீரர்களையும் உலகில் ஒற்றைத் தமிழன் இருக்கும் வரை நினைவு கூருவான் என அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews