சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையால் கடன் மறுசீரமைப்பு துரிதப்படுத்தப்பட்டது

சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கை மற்றும் நீடிக்கப்பட்ட கடன் வசதிகள் வேலைத்திட்டத்தின் முதலாவது மீளாய்வை நிறைவுசெய்த பின்னர் ஏற்பட்ட அதிகாரிகள் மட்டக் குழுவின் இணக்கப்பாடானது, பலதரப்பு கடன் வழங்குனர்களுக்கு எஞ்சிய தவணைகளை செலுத்துவதற்கும் கடன் மறுசீரமைப்பைத் துரிதப்படுத்துவதற்கும் உதவும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவினால், இந்த அதிகாரிகள் மட்டக் குழுவின் இணக்கப்பாட்டுக்கு, அங்கீகாரம் வழங்கப்பட்டதன் பின்னர் இரண்டாவது தவணையாக 330 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை பெற்றுக்கொள்ளும்.ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.சர்வதேச நாணய நிதியத்துடன் நாம் மேற்கொண்டுள்ள உடன்படிக்கை மற்றும் நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இரண்டாம் தவணைத் தொகையைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் அவசியமாக இருந்த அதிகாரிகள் மட்டக் குழுவின் அங்கீகாரம் நேற்று கிடைத்துள்ளது. இது குறித்து நீண்ட மீளாய்வுகள் இடம்பெற்றன. சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் மட்டக் குழு, இலங்கைக்கு வருகை தந்து இரண்டு வாரங்களாக விரிவான மீளாய்வுகளை நடத்தியது. மேலும் பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெறவேண்டி இருந்தமையால், அதன்போது எங்களால் அதிகாரிகள் மட்டக் குழுவின் இணக்கப்பாட்டுக்கு வரமுடியவில்லை.அதன்படி, நாம் மொரோக்கோவில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் கூட்டத்தொடரில் இது குறித்து மேலும் நீண்ட கலந்துரையாடல்களை நடத்தினோம். அதன்போது இன்னும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் எமக்கு தெளிவுகள் பெறவேண்டியிருந்ததால், நாம் மீண்டும் இலங்கைக்கு வந்து அவர்களுடன் இணைய வழியில் பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். 19ஆம் திகதி, இந்த தீர்மானமிக்க அதிகாரிகள் மட்டக் குழுவின் இணக்கப்பாட்டுக்கு வரும் செயற்பாடு, சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் மற்றும் எமது நாட்டின் அதிகாரிகள், குறிப்பாக மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளிகள் ஆகியோருக்கிடையில் நடைபெற்றது.இங்கு எமக்கு மிக முக்கியமான விடயங்களில் ஒன்றுதான், நாம் 2023 மார்ச் மாதம் சர்வதேச நாணய நிதியத்தின் அங்கீகாரத்தைப் பெற்றதன் பின்னர் ஏற்பட்டிருந்த அனுகூலமான நிலைமைக்கு கடந்த சில வாரங்களில் ஒரு சில தடங்கல்கள் ஏற்பட்டன. சில குழுக்கள் இந்தக் கலந்துரையாடல்கள் குறித்து சரியான புரிதல்கள் இன்றி, இந்த அதிகாரிகள் மட்டக் குழுவின் இணக்கப்பாடு கிடைக்காமை தொடர்பில் பல்வேறு பிரதிகூலமான கருத்துகளை முன்வைத்தனர்.அது மாத்திரமன்றி, இதன் ஊடாக பொது மக்களுக்கும் ஏனைய தரப்பினர்களுக்கும் நாம் இரண்டாவது தவணைத் தொகையைப் பெற்றுக்கொள்வது குறித்து சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அவர்கள் செயற்பட்டனர். ஆனால் இரண்டாவது தவணைத் தொகையைப் பெற்றுக்கொள்வது அல்லது அதிகாரிகள் மட்டக் குழுவின் அங்கீகாரம் கிடைப்பது குறித்து எவ்வித அச்சமும் இல்லை என்று நாம் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் உறுதியாகக் கூறி வந்தோம். ஒரு அரசாங்கம் என்ற வகையில் அந்த நம்பிக்கை எமக்கு இருந்தது.சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவினால், இந்த அதிகாரிகள் மட்டக் குழுவின் இணக்கப்பாட்டுக்கு, அங்கீகாரம் வழங்கப்பட்டதன் பின்னர் இரண்டாவது தவணையாக 330 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை பெற்றுக்கொள்ளும்.ஜனாதிபதி  இந்த நடவடிக்கைகளுக்கு வழங்கிய தலைமைத்துவம் குறித்து நான் இங்கு விசேடமாக குறிப்பிட வேண்டும். இந்த நாட்டின் பொருளாதாரத்தை ஸ்தீரப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கு ஜனாதிபதி கடந்த காலங்களில் மேற்கொண்ட நடவடிக்கைகள், வழங்கிய தலைமைத்துவம் மற்றும் ஜனாதிபதி அலுவலகம் உட்பட மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் அதிகாரிகள் வழங்கிய பங்களிப்புகள் மாத்திரமன்றி, நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் வழங்கிய ஆதரவுகள் மற்றும் அர்ப்பணிப்புகள் இந்தப் பணிகளை முன்னெடுக்க எமக்கு மிகவும் இலகுவாக அமைந்தது.இந்த அதிகாரிகள் மட்டக் குழுவின் இணக்கப்பாடு, உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஏனைய பலதரப்பு கடன் வழங்குனர்களுக்கு எஞ்சிய தவணைகளைச் செலுத்துவதற்கும் அதன் மூலம் சர்வதேச தரப்பினர்களுடன் கடன் மறுசீரமைப்பைத் துரிதப்படுத்துவதற்கும் உதவும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.மேலும், கடன் மறுசீரமைப்பு தொடர்பான இணக்கப்பாடுகளையும் விரைவில் நிறைவு செய்யலாம். ஊழலைக் குறைத்து வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது.இலங்கையின் பொருளாதாரத்தை தற்போதைய நிலைக்கு கொண்டு வந்ததற்காக சர்வதேச நாணய நிதியம் தமது பாராட்டைத் தெரிவித்தது. இதன் ஊடாக இலங்கை மீதான சர்வதேச நம்பிக்கை மேலும் உறுதிப்படுத்தப்பட்டது. அதற்கேற்ப, இந்நாட்டின் பொருளாதாரம் மேலும் ஸ்திரமான நிலைக்குச் செல்ல வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews