கப்பல் சேவை நாளையுடன் நிறுத்தம்!

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளையுடன் நிறுத்தப்படும் என்று துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாகை துறைமுகத்தில் இருந்து, இலங்கை காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த 14ஆம் திகதி தொடங்கியது. இந்தக் கப்பலில் பயணம் செய்ய முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், வாரம் முழுவதும் இயக்கப்படுவதற்குப் பதிலாக, திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் பயணிகள் கப்பல் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நாகையிலிருந்து பயணிகள் கப்பல் கடந்த 16ஆம் திகதி 15 பயணிகளுடனும், நேற்று 23 பயணிகளுடனும் இலங்கையின் காங்கேசன்துறைக்கு சென்றது.
இந்நிலையில், வடகிழக்குப் பருவ மழை வரும் 23ஆம் திகதி தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவும், நாகை துறைமுக விரிவாக்கப் பணி காரணமாகவும், நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்குச் செல்லும் பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளையுடன் (20) நிறுத்தப்படுகிறது.
நாளை காங்கேசன்துறைக்குச் செல்லும் பயணிகள் கப்பல், அங்கிருந்து கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கும் என்று துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews