தமிழ் அரசியற் கட்சிகளை வழிப்படுத்த மக்கள் இயக்கமொன்று பலம் பெற வேண்டும்…! பொ.ஐங்கரநேசன்  சுட்டிக்காட்டு.

விடுதலைப் புலிகள் இருந்தவரைக்கும் அவர்களின் அரசியல் துறையே தமிழ்த் தேசியக் கட்சிகளின் வழிகாட்டும் பீடமாக இருந்தது. அவர்கள் எதை முன்மொழிந்தார்களோ அதையே எமது கட்சித் தலைவர்கள் வழிமொழிந்தார்கள்.
தமிழ் மக்களுக்கான ஒரு தேசியத் தலைமை இல்லாத நிலையில் தமிழ் அரசியற் கட்சிகள் ஒவ்வொன்றும் திக்கொன்றாக  அவற்றினது எஜமானர்களின் அல்லது நிதியூட்டு நபர்களின் மனங்கோணாதவாறு செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் கட்சிகளை வழிப்படுத்த மக்கள் இயக்கமொன்று பலம் பெற வேண்டும் என்று தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர்  பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டிள்ளார்.
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் உரையரங்கு நேற்று ஞாயிற்றுக் கிழமை.(15.10.2023.) நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து உரையாற்றியபோதே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஆறுகள் ஒரு போதும் பின்னோக்கிப் பாய்வதில்லை. அது போன்றுதான் வரலாறும் பின்னோக்கிப் பாயாது. வரலாறு எங்களை எந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறதோ, அந்த இடத்திலிருந்துதான் வரலாறு தந்த படிப்பினைகளையும் உள்வாங்கிக் கொண்டு நாம் முன்னோக்கிப் பயணிக்க வேண்டும். ஆனால, இந்தக் கசப்பான உண்மையை ஏற்றுக்கொள்ள தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் தயாராக இல்லை.
முள்ளிவாய்க்காலில் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் அவர்கள்  முப்பது, நாற்பது வருடங்கள் பின்னால் சென்று அங்கிருந்து போராட நினைக்கிறார்கள். அதன் வெளிப்பாடுகளில் ஒன்றுதான் காலப்பொருத்தமற்று அடிக்கடி அறிவிக்கப்படும் கடையடைப்புப் போராட்டங்கள்.
தமிழ்க்கட்சி ஒன்றின் தலைவர் தாங்கள் ஆயுதங்களைக் கைவிட்டதைப் பிழையென்று தற்போது உணர்வதாக அண்மையில் தெரிவித்திருக்கிறார். ஆயுதங்களைக் கீழே போட்டு ஓடி விட்டு இப்போது கைவிட்டது என்று கூறுவது நகைப்புக்கிடமானது.
ஆயுதம் பற்றிய வெட்டிப் பேச்சை  மக்கள் இனியொருபோதும் இரசிக்க மாட்டார்கள். அதற்கு நிகரான வீச்சுடன் மக்களை அணிதிரட்டி காலிமுகத்திடல் அரகலிய போன்று போராட முன்வாருங்கள்.
புகைப்படங்கள் எடுப்பதற்கு முண்டியடித்து முன்னால் நிற்கும் தலைவர்களாக இல்லாமல் சொல்லாலும் செயலாலும் முன்மாதிரியாக உள்ள தலைவர்களின் பின்னால் அணிவகுத்து வருவதற்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள்.
தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தைத் தேர்தலை மாத்திரமே இலக்காக கொண்டுள்ள கட்சிகளிடம் ஒப்படைத்து விட்டு ஒதுங்கியிருக்கிறோம். இந்தக் கையறு நிலையிலேயே வலுவான சிவில் சமூகம் அல்லது மக்கள் இயக்கம் ஒன்றின் அவசியம் உணரப்படுகிறது.
இருக்கின்ற மக்கள் அமைப்புகள் ஒன்றில் அரசியற் கட்சிகளின் பினாமிகளாகச் செயற்படுகின்றன. அல்லது சிவில் சமூகப் பிரதிநிதியாகப் பிரபலம் பெற்று விட்டால் அவரிடம் தேர்தல் ஆசை தொற்றிக் கொள்கிறது. இவற்றுக்கு இடங்கொடாது கட்சிகளின் மூக்கணாங் கயிறாகச் செயற்படக்கூடிய மக்கள் இயக்கமொன்றைக் கட்டியெழுப்ப எமது புத்திஜீவிகள் முன்வர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews