இந்திய வெளிவிவகார அமைச்சர் – ஜனாதிபதி இடையில் சந்திப்பு இருநாட்டு ஒத்துழைப்புக்களை பலப்படுத்தும் வகையில் 03 ஒப்பந்தங்கள் கைசாத்து 

இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் (IORA) கூட்டத்தில் பங்கேற்க நாட்டிற்கு வருகை தந்திருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையிலான சந்திப்பு 11.10.2023 பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்திய – இலங்கை  உறவுகளை  மேலும் பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்களை பலப்படுத்திக்கொள்ளும் வகையிலான 03 ஒப்பந்தங்களும் கைசாத்திடப்பட்டன.
அதேபோல் இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் இந்நாட்டில் முன்னெடுக்கப்படும் வீட்டுத் திட்டத்தை இணையத்தின் ஊடாக திறந்துவைக்கும் நிகழ்வும் இதன்போது, இடம்பெற்றது.
10 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கான திட்டத்தின் நான்காவது அத்தியாயத்தின் கீழ் வீடொன்றை நிர்மாணிப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த 1.026 மில்லியன் ரூபாவை 2.8 மில்லியன் ரூபாயாக அதிகரித்துக்கொள்வதற்கான ஒப்பந்தமும் கைசாத்திடப்பட்டது.
இலங்கை மக்களின் வாழ்க்கைத் தரத்தை   மேம்படுத்தும் நோக்கில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் 9 திட்டங்களை விரைவில் நிறைவு செய்வதற்கு அவசியமான மேலதிக ஒதுக்கீடுகளை இந்திய அரசாங்கம் வழங்கவுள்ளதோடு அதற்கான ஒப்பந்தமும் கைசாத்திடப்பட்டது.
அதன் கீழ் வடக்கு மாகாணத்தின் 27 பாடசாலைகளை மேம்படுத்தல்,  மன்னார் மற்றும் அநுராதபுரம் வீடமைப்புத் திட்டங்கள், அட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் புஸ்ஸலாவை சரஸ்வதி மத்திய கல்லூரியின் அபிவிருத்தி பணிகள், பொலன்னறுவையில் பல்லின – மும்மொழிப் பாடசாலையொன்றை நிர்மாணித்தல், யாழ்ப்பாணத்தில் மழைநீரை சேகரிக்கும் வேலைத்திட்டத்தின் கீழான 2889 நிர்மாணிப்புக்கள், தம்புள்ளையில் பழங்கள் மற்றும் மரக்கறி வகைகள் பழுதடையாமல் பாதுகாப்பதற்கான 5000 மெட்ரிக் டொன் கொள்ளளவுடைய குளிரூட்டி வசதிகள் அமைத்தல், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு புதிய சத்திரசிகிச்சை பிரிவொன்றை நிறுவுதல் உள்ளிட்ட வேலைத்திட்டங்கள்  விரைவில் நிறைவு செய்யப்படவுள்ளன.
அதேபோல் இலங்கையின் தேசிய பாலுற்பத்தியை பலப்படுத்தும் வகையில் இந்தியாவின் குஜராத் கூட்டுறவு பால் விற்பனை சம்மேளனமான (அமுல் குழுமம்) மற்றும் இலங்கையின் காகீல்ஸ் கூட்டு வர்த்தக நிறுவனம், இந்திய தேசிய பாலுற்பத்தி ஊக்குவிப்பு சபை ஆகியன இணைந்து முன்னெடுக்கவுள்ள கூட்டு வேலைத்திட்டத்திற்கான ஒப்பந்தமும் கைசாத்திடப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் பலனாக கைசாத்திடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் ஊடாக இந்நாட்டின் கால்நடை வளர்ப்புத் துறையை மேம்படுத்துவதற்கான நிதி உதவிகள் கிடைக்கவுள்ளன. அத்தோடு, முதல் ஐந்து வருடங்களில் பால் உற்பத்தியை 53% வீதத்தினால் அதிகரித்துக்கொள்ளவும் 15 வருடங்களில் இலங்கையை பாலுற்பத்தியில் தன்னிறைவான நாடாக மாற்றும் நோக்கத்துடனும் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதன் கீழ் கால்நடைகளுக்கு அவசியமான உயர்தர மருந்துகள் மற்றும் உணவு, தொழில்நுட்ப உதவிகளை வழங்கி 2 இலட்சம் பாலுற்பத்தியாளர்களை வலுவூட்ட எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கால்நடை வளர்ப்புத் துறையை டிஜிட்டல் மயமாக்குதல், பால் உற்பத்திகளின் தரத்தை அதிகரிப்பதற்கான தொழில்நுடங்களுக்கான முதலீடுகள் மற்றும் பால் சார்ந்த உற்பத்திகளை குறைந்த விலையில் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரதிபலன்கள் கிட்டும்.
இதன்போது இலங்கை – இந்திய உறவுகளுக்கு 75 வருடம் பூர்த்தியாவதையிட்டு விசேட நினைவுச் சின்னமொன்றும் வெளியிடப்பட்டது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச் செயலாளர் புனீத் அகர்வால் ஜே.பீ.சிங், இலங்கைக்கான இந்தியாவின் பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே,  இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரசூ புரி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.  இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அமைச்சர் ஜீவன் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் தேனுக விதான கமகே, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஸ்வரன், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, பொருளாதார அலுவல்கள் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க,  வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, ஜனாதிபதியின் சர்வதேச அலுவல்கள்  தொடர்பான பணிப்பாளர் தினுக் கொலம்பகே உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews