இன, மத பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு- ஜனாதிபதி

இன மற்றும் மதப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் ஒரு நாடு என்ற வகையில் முன்னோக்கிச் செல்ல முடியாது என்பதால், விரைவில் அதற்குரிய தீர்வுகளை காண்பதற்காக அனைத்து தலைவர்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தவிருப்பதாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வேறுபாடுகளை முன் நிறுத்தி மோதல்களை ஏற்படுத்திக் கொண்டதால் நாடு என்ற வகையில் இலங்கை சரிவை சந்திக்க நேரிட்டதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசியல் ரீதியான வேறுபாடுகளும் இலங்கையை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளதெனவும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரியின் 150 ஆவது ஆண்டு பூர்த்தி விழா நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரம் முழுமையாக சரிவடைந்ததால் கடந்த வருடத்தில் நாட்டு மக்கள் முகம்கொடுத்த நெருக்கடிகளை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, அனைத்து வேறுபாடுகளையும் விடுத்து நாட்டுக்காக அனைவரும் ஒன்றுபட்டு பயணிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

உள்நாட்டு பிரச்சினைகளை நாட்டுக்குள்ளேயே தீர்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி அதற்காக சர்வதேசத்தை நாட வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரியின் 150 ஆவது ஆண்டு பூர்த்தி விழா நேற்று நடைபெற்றது.

கல்லூரிக்கு வருகைத் தந்த ஜனாதிபதிக்கு பாடசாலை சமூகத்தினரால் மிகுந்த வரவேற்பு வழங்கப்பட்டது.

இதன்போது ஜனாதிபதிக்கு பாடசாலை சமூகத்தினரால் நினைவுப்பரிசும் வழங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்களுடன், ஜனாதிபதி சுமூகமாக கலந்துரையாடியதுடன், புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர்களான எஸ்.வியாழேந்திரன், சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோருடன் மட்டக்களப்பு சென்.மைக்கல் கல்லூரியின் அதிபர் எண்டன் பெனடிக் பாடசாலையின் ஆசிரியர் குழாம், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews