வைத்தியசாலையின் அசமந்தப் போக்கு காரணமாகவே எனது பேர்த்தியின் கை அகற்றப்பட்டது – பேரன் கதறல்…!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அசமந்தப் போக்கு காரணமாக எனது பேர்த்தியின் கையானது துண்டிக்கப்பட்டு விட்டது என பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயின் தந்தையார் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் – மல்லாகத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து நேற்றையதினம் (04) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
என்னது பேர்த்தி வைசாலிக்கு கடந்த 22 ஆம் தேதி காய்ச்சல் ஏற்பட்டது. காய்ச்சலுக்காக ஏழாலையில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் இரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இரத்த பரிசோதனையின்படி அவருக்கு கிருமி இருப்பதாக கூறப்பட்டது.
தட்டாதருவில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில், குழந்தை வைத்திய நிபுணர் சரவணபவன் அவர்களிடம் சிறுமியை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றவேளை காய்ச்சலுக்கு மருந்து வழங்கப்பட்டது. தொடர்ந்து காய்ச்சல் இருந்ததன் காரணமாக திருநெல்வேலி உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றிற்கு சிறுமியை அழைத்துச் சென்று, ஒருநாள் விடுதியில் அனுமதித்திருந்தோம். ஆனால் அங்கு வழங்கப்பட்ட சிகிச்சைக்கும் காய்ச்சல் குறையவில்லை என்ற காரணத்தினால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சிறுமியை அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.
அன்றைய தினமே இரவு எட்டு மணிக்கு யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலைக்கு சிறுமியை அழைத்துச் சென்று பன்னிரண்டாம் இலக்க விடுதியில் அனுமதித்தோம். அங்கே சிறுமிக்கு மருந்துகள் கொடுக்கப்பட்டன. அத்துடன் ஊசி மருந்தை செலுத்துவதற்காக கையில்  ஒரு ஊசி போன்ற கருவி ஏற்றி அதனூடாக மருந்து ஏற்றப்பட்டது.
அந்த மருந்து ஏற்றப்பட்ட பின்னர் கையானது வீக்கம் அடைந்திருந்ததுடன் எனது பேர்த்தி வலியால் துடித்தார். இந் நிலையில் அந்த விடுதியில் கடமையில் இருந்த தாதியருக்கு இது சம்பந்தமாக தெரியப்படுத்தப்பட்டது. ஆனால் அவர்கழ் அதைப் பற்றி கவனம் எடுக்கவில்லை.அன்டிபைட்டிக் மருந்து ஏற்றினால் அப்படித்தானம்மா இருக்கும் என்று கூறினார்கள்.
அன்று இரவே பேர்த்தியின் கை கறுப்பாக மாறிக்கொண்டிருந்தது. இதுகுறித்து தாதியர்களிடம் சொன்ன போதும் அவர்கள் எந்த விதமான கவனமும் எடுக்கவில்லை. அதனை அடுத்து அடுத்த நாள் காலை வைத்தியர்கள் வந்த போது இது தொடர்பாக வைத்தியர்களுக்கு கூறப்பட்டது.
இந்நிலையில் அன்டிபைட்டிக் மருந்து கை முழுவதும் பரவி உள்ளதாகவும் அதனால் கையில் உள்ள நரம்புகள் முழுமையாக செயலிழந்து விட்டதாகவும் வைத்தியர் கூறினார். பின்னர் அவசர மருத்துவ சிகிச்சை பிரிவுக்கு குழந்தை மாற்றப்பட்டது. அவர்கள் அந்த நரம்பினை வெட்டி சத்திர சிகிச்சை செய்வதாக கூறி எங்களிடம் கையொப்பம் வாங்கினார்கள். சரித்திர சிகிச்சை செய்த பின்னர் குழந்தையை விடுதிக்கு அழைத்து வந்தனர். ஆனால் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை.
அடுத்த நாளும் மீண்டும் சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் என அழைத்துச் சென்றனர். அதற்குப் பின்னரும் எந்த முன்னேற்றமும் இல்லை. மீண்டும் அடுத்த நாளும் சத்திரசிகிச்சை செய்யவேண்டும் எனக்கூறி தியேட்டருக்கு அழைத்துச் சென்றனர். சத்திரசிகிச்சைக்கு பின்னர் தான் எமக்கு தெரியும் கை அகற்றப்பட்ட விடயம்.
கிருமி கைகளுக்கு மேலே வரை சென்றால் முழு கையையும் அகற்ற வேண்டி வரும். எனவே மணிக்கட்டு வரை கையை அகற்றியுள்ளோம் என கூறப்பட்டது. ஆனால் கையை அகற்றுவதற்கு முதல் எங்களுக்கு முழுமையாக எதுவும் சொல்லப்படவில்லை. தற்போதுவரை குழந்தை அவசரசிகிச்சைப் பிரிவில் தான் உள்ளது.
வைத்தியசாலையில் உள்ள உயர் அதிகாரிகள் வரை நாங்கள் அறிவித்திருக்கின்றோம். ஆனால் இதுவரை எமக்கு எந்த விதமான தீர்வும் சொல்லப்படவில்லை.
வைத்தியசாலையில் தாதியர்களின் அசமந்த போக்கு காரணமாக, அவர்கள் தமது வேலையில் சரியாக ஈடுபடாமையினால் எனது பேர்த்தியின் கை அகற்றப்பட்டுள்ளது – என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews