ஜெனிவா 48வது கூட்டத் தொடர் ஏமாற்றம்தான் எனினும் சோர்வடையத் தேவையில்லை…!சி.அ.யோதிலிங்கம்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 48 வது கூட்டத்தொடரில் மனித உரிமைகள்
பேரவை ஆணையாளரின் வாய்மூல அறிக்கை காரமானதாக இருக்க மாட்டாது என்பது  எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான். ஆனாலும் தமிழ் மக்களைப் பெரிதாகப்
பாதிக்காதவகையில் சுமாராக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த
எதிர்பார்ப்பில் மண் விழுந்திருக்கின்றது. அவரது சென்ற தொடர்
அறிக்கைக்கும் தற்போதைய அறிக்கைக்கும் இடையே மலைக்கும் , மடுவுக்குமான வித்தியாசம் இருக்கின்றது . இந்த இடைக்காலத்தில் இலங்கை தொடர்பாக பேரவையில்
செல்வாக்கு செலுத்தும் வல்லரசுகளின் பார்வையே இந்த மாற்றத்திற்கு காரணம்
எனலாம். ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமெரிக்கா தலமையிலான மேற்குலகத்தின்  செல்வாக்குக்கு உட்பட்ட ஒன்று என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் தான். ஆனாலும்
அதற்கு உலகப் பொது அடையாளம் ஒன்று உண்டு. அதனை கீழ் இருக்கக் கூடிய வகையில்  ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செயற்பட்டடிருப்பது
பொருத்தமானதல்ல.
தமிழ் மக்களைப் பொறுத்த வரை இக்கட்டுரையாளர் முன்னரும் தொடர்ச்சியாக வலியுறுத்தியுள்ள விடயம் ஐந்து பிரதான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர் அவர்கள் என்பதாகும். அரசியல் தீர்வு என்கின்ற அடிப்படைப் பிரச்சினை இன அழிப்பிற்கு நீதி கோரும் பிரச்சினை, ஆக்கிரமிப்புப் பிரச்சினை,
காணிப்பறிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் போனோர் விவகாரம், உட்பட
இயல்பு நிலையைக் கொண்டு வருதல் பிரச்சினை போரினால் பாதிக்கப்பட்டவர்களின்
நலன்கள் உட்பட தமிழ் மக்கள் எதிர் நோக்கும் அன்றாடப்பிரச்சினை என்பனவே  அவ் ஐந்துமாகும். இவற்றில் எது பற்றியும் அழுத்தமான கருத்துக்கள்
ஆணையாளரினால் முன்வைக்கப்படவில்லை. இப்பிரச்சினையில் அரசியல் தீர்வு என்கின்ற. அடிப்படைப்பிரச்சினையும் இன அழிப்புக்கு சர்வதேச நீதி கோரும்
பிரச்சனையுமே முக்கியமான பிரச்சினைகள். ஐ.நா மனித உரிமைகள் பேரவையும் இவ்விரு பிரச்சினைகளிலும் மையம் கொண்டு தான் கடந்த காலங்களில் தீர்மானங்களை
நிறைவேற்றியுள்ளது. அவை பொறுப்புக் கூறுதல் நல்லிணக்கம் என
அழைக்கப்பட்டன. இதிலும் பொறுப்புக்கூறுதல் விடயத்துக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. 46/1 தீர்மானமும் அதற்காக நிறைவேற்றப்பட்டதே. ஐ.நா மனித
உரிமை ஆணையாளர் கடந்த கூட்டத் தொடரில் இது பற்றிக் கடுமையான உரையை ஆற்றியிருந்தார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அப்பால் சர்வதேச குற்றவியல்
நீதிமன்றத்திற்கு இவ்விவகாரம் கொண்டு செல்லப்பட வேண்டும் என்று சாரப்படவும் அறிக்கையில் தெரிவித்திருந்தார். தவிர நாடுகள் தங்கள் தங்கள் நாடுகளின்
நீதிமன்றங்களில் இது பற்றிய விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு தயாராக வேண்டும்
என்றும் கூறியிருந்தார். இவருடைய இந்தக் கருத்துக்களுக்கு மாறாக மனித உரிமைகள் பேரவை தீர்மானங்களை நிறைவேற்றியிருந்தது என்பது வேறு கதை. மனித உரிமை
ஆணையாளர் இந்தத் தடவை சென்ற தடவை கூறிய கருத்துக்களை வலியுறுத்தி மேல்நிலைக்கு
கொண்டு செல்வதற்கான உபாயங்களையே தெரிவித்திருக்க வேண்டும். சர்வதேச
குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதில் தடங்கல்கள் ஏற்படும் என
அவர் கருதியிருந்தால் குறைந்தபட்சம் பொதுவான தீர்ப்பாயம் ஒன்றை அமைப்பது பற்றியோ நாடுகள் தங்கள் தங்கள் நாட்டு நீதிமன்றங்களில் விசாரணைகளை  மேற்கொள்ள வேண்டும் எனபது பற்றியோ வலியுறுத்தல்களை முன்வைத்திருக்கலாம். இவற்றுக்கு மாறாக அவற்றைப்பற்றி எதுவுமே பேசாமல் விடும் நிலை தான்
அறிக்கையில் தென்பட்டிருக்கிறது. இது மனித உரிமை ஆணையாளர் என்கின்ற
பிரதிமைக்கு பலத்த பாதிப்பைக் கொண்டு வந்திருக்கின்றது என்றே கூற வேண்டும். ஐ.நா மனித உரிமை ஆணையாளர் தமிழ் மக்களைப் போல மனித உரிமை மீறல்களினாலும் சர்வாதிகார அராஜகத்தினாலும் பாதிக்கப்பட்ட ஒருவா் தனது
காதலனையும் தந்தையையும் அதற்கு பலி கொடுத்தவர். தானும் சிறையில் இருந்தவர்.  தமிழ் மக்களின் வலி அவருக்குப் புரியாதது மிகுந்த கவலையைத் தருகின்றது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையாளரது அறிக்கை என்றாலும் சரி பேரவையின் தீர்மானங்கள் என்றாலும் சரி பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரை தொடர் முன்னேற்றத்தைத் தருபவையாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இவை தொடர்  பின்னேற்றங்களையே தந்திருக்கின்றன. தமிழ் மக்கள் விவகாரத்தில் ஐ.நா மனித
உரிமைகள் பேரவை கழுதை தேய்ந்து கட்டெறும்பாக வந்த விட்டது என்றே கூறலாம். இனிமேல் இதனை நம்புவது தமிழ் மக்களுக்கு பலன்களைத் தரும் எனக் கூற முடியாது. சர்வதேச அரசியல் தான் சர்வதேச நீதி என்பார்கள். தமிழ் மக்களுக்கான சர்வதேச
நீதி இது தானா? என எண்ணத் தோன்றுகின்றது.
நல்லிணக்கத்தைப் பொறுத்தவரை சென்ற தடவை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின்  தீர்மானம் குறைந்தபட்சம் 13 வது திருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தல் வேண்டும் எனக் கூறியிருந்தது. இந்தத் தடவை அதையும் காணவில்லை. பெருந்தேசிய வாதத்துடன் மோதக் கூடாது என ஐ.நா மனித உரிமைகள் பேரவையும்
முடிவுக்கு வந்த விட்டது போல தெரிவிக்கின்றது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையாளரின் அறிக்கையில் தமிழ் மக்களுடன் தொடர்புடைய விடயங்கள் எனக் கூறப்பிட்டவை சில தான் பயங்கரவாத தடைச்சட்டத்தை
நீக்குதல், நினைவேந்தல் நிகழ்வுகளை போராடத்தடை விதித்தமை, காணாமல்
போனோர் விவகாரம் போன்ற இயல்பு நிலையைக் கொண்டு வருதல் பிரச்சினைகள் மட்டும் தான். அவற்றிலும் கூட தமிழ் மக்கள் திருப்திப்படக் கூடிய வலியுறுத்தல்கள்  எவையும் அவர் முன்வைக்கவில்லை. பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பாக உடனடியாக அதனை நீக்க வேண்டும் அதன் கீழ் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற வலியுறுத்தல்களை மேற்கொண்டிருக்கலாம் மாறாக ஆலோசனைச்  சபைகளை நிறுவியதற்கு பாராட்டுப்பத்திரம் மட்டுமே வழங்கப்பட்டது. காணாமல்
போனோர் விவகாரத்திலும் கூட உண்மையைக் கண்டறிய வேண்டும் என்பதற்கு அவர் பெரிய அழுத்தங்கள் எவற்றையும் கொடுக்கவில்லை. மாறாக கிளிநொச்சியில் 6 வது பிராந்திய அலுவலகம் திறக்கப்பட்டமையை வரவேற்கும் கருத்தே வந்திருக்கின்றது.
அண்மைக்காலமாக தமிழ் மக்கள் எதிர்நோக்கும் ஆக்கிரமிப்பு
பிரச்சினைகள் பற்றி ஆணையாளர் வாயே திறக்கவில்லை. இந்த விவகாரம் மனித உரிமை மீறல் விவகாரமாக அவர் கருதவில்லையா?  என்று அவரை கேட்கத் தோன்றுகின்றது. தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமாக இருப்பதை சிதைப்பதற்காக திட்டமிட்டு மேற்கொள்ளப்பபடும் செயற்பாடுகளே இவ் ஆக்கிரமிப்புக்கள் ஆகும்.
இவை பற்றி நிறையவே அதாரங்களுடன் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.
தவிர போரினால் பாதிக்கப்பட்டவர்கள் நலன்கள் உட்படப் பல்வேறு
அன்றாடப்பிரச்சினைகளுக்கு தமிழ் மக்கள் முகம் கொடுத்து வருகின்றனர். செல் துண்டுகளை உடம்பில் ஏந்தியபடி பாடசாலைக்குச் செல்லும் சிறுவர்கள்; உள்ளனர். பெண் தலைமைத்துவ குடும்பங்கள் பல வாழ்வாதாரத்தைப் பேணுவதற்கே மிகவும்
சிரமம்படுகின்றன. போரினால் அங்கவீனமாக்கப்பட்டவர்கள் தொடர்ச்சியாக கடும் துயரங்களை அனுபவிக்கின்றனர். புனர்வாழ்வு பெற்றதாகக் கூறிக்கொள்ளப்படும் முன்னாள் போராளிகள் படையினராலும்
புலனாய்வுப்பிரிவினராலும் பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். இவை பற்றி எந்தவித கருத்துக்களையும் ஆணையாளர் முன்வைக்கவில்லை
தமிழ்த்தேசியக் கட்சிகளில் தமிழரசுக் கட்சியைத் தவிர ஏனைய கட்சிகள்
அனைத்தும் ஆணையாளரின் அறிக்கை தொடர்பாக கடுமையான அதிருப்தியை
வெளியிட்டுள்ளன. தமிழரசுக் கட்சிக்குள்ளும் சம்பந்தனும், சுமந்திரனும் மட்டும்
ஏனையவர்களுக்கு மாறாக அறிக்கையை வரவேற்றுள்ளனர். குறைந்த பட்சம் பிரதான
விவகாரங்களான பொறுப்புக்கூறல் , நல்லிணக்கம் என்பன பின்தள்ளப்பட்டுள்ளது.
என்பது பற்றி அதிர்ப்தியைத் தெரிவித்திருக்கலாம். தமிழ் மக்கள் சந்திக்கின்ற ஆக்கிரமிப்புப் பிரச்சினைகள் பற்றி எதுவும் கூறப்படாததையும்
குறிப்பிட்டிருக்கலாம். இந்த அதிர்ப்திகளை மக்களின் சார்பில் தெரிவித்து விட்டு
சிங்கள தேசத்தின் மனித உரிமை மீறல் விவகாரம் பற்றி குறிப்பிட்டதை
வரவேற்றிருக்கலாம். இராஜதந்திர மொழியின் குறைந்த பட்சம் வடிவம் இதுவாகத் தான்  இருந்திருக்க வேண்டும். மாறாக மகிழ்ச்சி பொங்க ஆரவாரத்துடன்  வரவேற்றிருக்கின்றனர். இது எடுபிடி அரசியல்வாதிகளுக்கான பண்பே ஒழிய விடுதலைக்காகப் போராடும் தேசிய இன அரசியல்வாதிகளின் பண்பு அல்ல.
போதாக்குறைக்கு இவர்களோடு இணைந்து முண்டியடித்துக் கொண்டு தமிழ்  முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசனும் ஆணையாளரின் அறிக்கையை
வரவேற்றிருக்கின்றார். அவர் தென்னிலங்கையைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி . அங்கு இடம் பெறுகின்ற மனித உரிமை மீறல் விவகாரம் பற்றி பேசப்படுவது  அவரைப் பொறுத்தவரை அவசியம் தான். ஆதனால் அவர் வரவேற்றதைத் தவறு என்று
கூறி விட முடியாது . அனால் வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் தொடர்பாகவும் அவருக்கு பொறுப்புக்கள் உண்டு . தமிழ்மக்களின் அதிர்ப்தியைத் தெரிவித்து விட்டு வரவேற்றிருந்தால் அது தமிழ் மக்களுக்கு சற்று மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும்
கொடுத்திருக்கும் எனினும் இது விடயத்தில் தமிழ் மக்கள் தெரிவு செய்த சம்பந்தனும் சுமந்திரனும் தமிழ் மக்களின் சுய மரியாதைக்கு மாறாக நடக்கும் போது மனோகணேசனில் பெரிய குறையினைக் கண்டு பிடிக்க முடியாது.மனித உரிமைகள் பேரவை ஆணையாளரின் இப்பின்னேற்ற அறிக்கைக்கு பல
காரணங்கள் உண்டு.  அதில் முதலாவது காரணம் தமிழத்தேசிய அரசியல் தலமைகளின் செயற்பாடுகள் ஆகும். இங்கு களத்தில் மூன்று அணிகள் செயற்பட்டாலும்  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பே உலகப் பார்வையில் பலம் பொருந்திய அணி ஆகும்.

இந்த அணி ஐ.நா விவகாரத்தில் தமிழ் மக்களின் சுயமரியாதைக்கு மாறாக தலைகீழாக நடந்து கொண்டது. அதன் ஆதரவுடன் தான் ஆணையாளரின் இவ் அறிக்கை  வெளிவந்திருக்கிறது. முன்னரே கூறியது போல அறிக்கையை முந்திக் கொண்டு வரவேற்றதும் கூட்டமைப்பின் தலைமை தான் . மனித உரிமை ஆணையாளரின் பார்வைக்கு
கடிதங்களையும் அறிக்கைகளையும் அனுப்ப வேண்டிய கடைசித்திகதி ஆகஸ்ட் 22 ஆம் திகதி
ஆகும். இத்திகதிக்கு முன்னரே கடிதத்தை அனுப்பியது சம்பந்தன் தலைமை மட்டும் தான்.
ஆனால் இக்கடிதம் பற்றி சம்பந்தனும் சுமந்திரனும் பங்காளிக்கட்சிகளுக்கோ ,
குறைந்தபட்சம் தமிழரசுக் கட்சியினருக்கோ எதுவும் தெரிவிக்கவில்லை . இக்கடிதத்தின்
உள்ளடக்கம் பற்றி தம்மைத் தெரிவு செய்த மக்களுக்கும் பகிரங்கமாக
வெளிப்படுத்தவில்லை. இவை எல்லாவற்றையும் இரகசியமாகவே செய்து முடித்திருக்கிறார்கள்; மேற்குலகத்திற்கு சார்பான தென்னிலங்கை அரசசார்பற்ற
சிறுவனம் ஒன்று தயாரித்த அறிக்கையினையே தங்களது ஆவணமாக அனுப்பியிருக்கின்றனர்.
இதுவிடயத்தில் மேற்குலக நலன்களுக்கும் தமிழ் மக்களின் நலன்களுக்குமிடையே
பொதுப்புள்ளியினைக் கண்டுபிடித்து அதனைப்பலப்படுத்த அவர்கள் முன்வரவில்லை. மாறாக வல்லரசுகளின் எடுபிடிகளாக அவற்றின் நிகழ்ச்சி நிரல்களுக்கு  பின்னால் நகரவே முற்பட்டனர். கோத்தபாய அரசாங்கத்தைப் பாதுகாப்பதும்
அவர்களின் இலக்குகளில் ஒன்று . சுமந்திரன் – பீரிஸ் சந்திப்புக் கூட இதற்கான டீல்களில் ஒன்று தான் அரசியல் தீர்வு பற்றி பேசப்பட்டது என்பதெல்லாம் சுத்த ஏமாற்றக் கதை .
அமெரிக்கத் தலைமையிலான மேற்குலக – இந்தியக் கூட்டின் நலன்களுக்கும் அதன் அடிப்படையிலான நிகழ்ச்சி நிரலுக்கும் தமிழ்த்தேசிய அரசியல் எப்போதும் பெரும் தடையாக உள்ளது. அவற்றின் கோரப்பசிக்கு இலங்கைத்தீவு முழுவதும் தேவை .
தமிழத்தேசிய அரசியலுக்கு ஆதரவு கொடுத்தால் பெருந்தேசியவாதிகளை பகைக்க வேண்டி வரும். அது முழு இலங்கைத்தீவிலும் ஆக்கிரமிப்புச் செலுத்துதல் என்ற அவர்களின்
கனவிற்கும் பெரும் தடையாக இருக்கும். இதனால் தமிழ் மக்கள் மத்தியில்
தமிழ்த்தேசியம் நீக்கம் செய்யப்பட்ட தமிழ் அரசியலே மேலோங்கி நிற்க
வேண்டும் என்பதில் அவர்கள் மிகக் கவனமாக உள்ளனர். அவர்களைப் பொறுத்தவரை தமிழ் மக்களின் ஆதரவு தேவை ஆனால் அது தமிழ்த்தேசிய அரசியலாக இருக்கக் கூடாது.
தங்களது இந்த நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதற்காக அவர்கள் கண்டு பிடித்தவர்கள் தான் சம்பந்தனும் சுமந்திரனும் . அவர்களும் எஜமான் விசுவாசத்திற்கு உட்பட்டு மிகக் கச்சிதமாக அவற்றை மேற்கொண்டு வருகின்றனர். 2009 க்குப்பின்னரான
இவர்கள் இருவரினதும் அரசியல் என்பது தமிழ்த்தேசிய நீக்க அரசியல் தான்.
ஆனால் அவர்கள் சந்திக்கின்ற நெருக்கடி தமிழ் மக்களை தமிழ்த்தேசிய நீக்க அரசியலுக்குச் சார்பாக எவ்வாறு மாற்றுவது என்பதே.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இவ்வாறு மாபெரும் தவறினை இழைக்கின்ற போது ஏனைய தரப்புக்கள் சுத்தமாக இருந்தன எனக் கூறிவிட முடியாது. அவர்கள் வருடாவருடம்
ஜெனிவா கூட்டத் தொடர் ஆரம்பமாவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் தான் இது
பற்றியே பேச முற்படுவர் . இந்தத் தடவை கலாவதித் திகதிக்குப் பின்னரே இவர்கள் தங்கள் கடிதங்களை அனுப்பியிருந்தனர். இது மோசமான பொறுப்பற்றதனம் என்றே கூற வேண்டும். அதிலும் கூட ஒருங்கிணைந்த செயற்பாட்டை இவர்களால்
பின்பற்ற முடியவில்லை. விக்கினேஸ்வரன் தலைமையிலான அணியில் அனந்தியின்
கட்சியையும் , ஐங்கரநேசனின் கட்சியினையும் இணைக்க முடியவில்லை. சரி இவர்களை விட்டுவிடுவோம் தூய தமிழ்த்தேசியவாதிகள் என தம்மை அழைத்துக் கொள்கின்ற தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் இந்த விவகாரத்தில் கோட்டை
விட்டிருக்கின்றது. ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கடைசியாகக் கடிதம் அனுப்பியது  இக் கட்சிதான். அவர்களுக்கு கடிதம் தயாரித்துக் கொடுக்க அரச சார்பற்ற
நிறுவனங்கள் எதுவும் இல்லைப்போலத் தெரிகின்றது. இரண்டாவது காரணம் சிங்கள தேசத்தில் மாற்றம் கண்டுள்ள அரசியல் சூழலாகும். அங்கு இரு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஒன்று
அரசிற்கெதிரான சிங்கள மக்களின் அதிர்ப்தி முன்னெப்போதையும் விட
அதிகரித்து வருகின்றது. இரண்டாவது பொதுஜன முன்னணிக்குள்ளேயே அதிகாரமுள்ள லிபரல்முக அணி ஒன்று மேற்கிளம்பியுள்ளது. பசில் ராஜபக்ச- பு.டு.பீரிஸ்- மிலிந்த மொரகொட அணியே இந்த லிபரல் அணியாகும். அமெரிக்க தலைமையிலான மேற்குலக இந்தியக் கூட்டு சிங்களதேச அரசியல் சூழல் காரணமாக அங்கு செயற்படக்
கூடிய ஒரு வெளி வந்துவிட்டது என நினைக்கின்றது. இதனால் அதனைப் பலப்படுத்துவதற்காக
பொறுப்புக் கூறல் நல்லிணக்க செயற்பாடுகளை சற்றுப் பின்னுக்குத்
முயற்சிக்கின்றது. தற்போதைய சர்வதேச மேலாதிக்க சக்திகளின் நகர்வுகள் தமிழ் மக்களுக்கு கவலை
தரக்கூடிய ஒன்றுதான். ஆனாலும் இவ் விவகாரத்தில் தமிழ்மக்கள் சேர்ந்துவிடக் கூடாது.  சர்வதேச அரசியல் சூழல் எப்போதம் ஒருபடித்தானதாக இருப்பதில்லை. அங்கும்
இடைவெளிகள் இருக்கும். அந்த இடைவெளிகளைக் கண்டுபிடித்து தமிழ் மக்கள் தங்களைப்

பலப்படுத்த முன்வர வேண்டும். ஜெனீவா தொடர்ச்சியாக தமிழ் மக்களுக்கு
ஏமாற்றத்தைத் தந்தாலும் அது தமிழ்மக்களை சர்வதேச ரீதியாக பலப்படுத்துவதற்கான
ஒரு களம் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.
பருவகால பயிர்ச்செய்கைபோல இல்லாமல் ஜெனீவாவைக் கையாள்வதற்கான
மூலோபாயங்களையும் தந்திரோபாயங்களையும் உடனடியாக உருவாக்குவது
அவசியமானது.

 

 

 

Recommended For You

About the Author: Editor Elukainews