வனத்துறை அதிகாரிகளால் தாக்கப்பட்ட இருவர் வைத்தியசாலையில்

வனவள பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் சிலரைத் தாக்கி அவர்களின் வீடுகளைச் சேதப்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.  வனவள திணைக்கள உத்தியோகத்தர்களின் தாக்குதலினால் காயமடைந்த முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கைவேலியைச் சேர்ந்த இருவர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

2000ஆம் ஆண்டு கைவேலி பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பில் அங்கம் வகித்த 45 குடும்பங்களுக்கு வீட்டுத் திட்டம் உருவாக்கப்பட்டதோடு, 2000-2009 காலப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான யுத்தச் சூழலின் கீழ் அந்த குடும்பங்கள் அந்த வீடுகளை விட்டு வெளியேறி வேறு பிரதேசங்களுக்குச் சென்றிருந்தன.

யுத்தம் நிறைவடைந்த பின்னர், வீடுகள் இருந்த இடங்களில் மீள்குடியேற அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், 2012ஆம் ஆண்டு வனவள பாதுகாப்பு திணைக்களம் குறித்த பகுதியில் எல்லைக் கற்களை நட்டு காணிகளை கைப்பற்றியுள்ளதாக பிராந்திய ஊடகவியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

2000ஆம் ஆண்டு கைவேலில் வீடுகளைப் பெற்ற 45 குடும்பங்களில் பல குடும்பங்கள் வேறு பகுதிகளில் குடியேறியுள்ளதோடு, பல குடும்பங்களை சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளனர்.

எஞ்சிய 20 குடும்பங்கள் கடந்த வார இறுதியில் தற்காலிக வீடுகளை அமைத்து மீண்டும் அந்த காணியில் குடியேற தேவையான ஏற்பாடுகளைச் செய்ததாக  பிராந்திய ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர்.

வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரிகள் ஜூலை 12 பிற்பகல் துப்பாக்கிகள், கத்திகள், மற்றும் தடிகளுடன் அந்த இடத்திற்குச் சென்று தமது வீடுகளை அழித்து தாக்கியதாக முன்னாள் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

வனவள பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் தமது வீடுகளுக்கு தீ வைப்பதற்காக மண்ணெண்ணெயை கொண்டு வந்ததாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கடந்த 12ஆம் திகதி மாலை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து பிரச்சினை தொடர்பில் பிரதேச செயலாளருக்கு தொலைபேசியில் அறிவித்துள்ளனர்.

காணிப்பிரச்சினை தொடர்பில் கிராம உத்தியோகத்தருக்கும் தெரியப்படுத்திய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கிராம உத்தியோகத்தருடன் கலந்துரையாடி தீர்வை வழங்குவதாக மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews