13ம் திருத்தத்தை விரும்பாதவர்கள் குந்தகம் செய்யாதீர்கள்! உள்ளதை உதறினால் சூனியமாகும் – பேராசிரியர் பத்மநாதன்

13ம் திருத்தத்தை விரும்பாதவர்கள் குந்தகம் செய்யாதீர்கள்! உள்ளதை உதறினால் சூனியமாகும் – பேராசிரியர் பத்மநாதன் .

13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த விரும்பாதவர்கள் அதனை நடைமுறைப்படுத்த விரும்புபவர்களுக்கு குந்தகம் விளைவிக்க வேண்டாம் என யாழ்.பல்கலைக்கழக வேந்தரும் வரலாற்று துறைப் பேராசிரியருமான சிவசுப்பிரமணியம் பத்மநாதன் வேண்டுகோள் விடுத்தார்.

நேற்றைய சனிக்கிழமை தந்தை செல்வா நினைவு மண்டபத்தில் இடம்பெற்ற 13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதில் இந்தியாவின் வகிபாகம் பற்றிய கலந்துரையாடலை தலைமை தாங்கி கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைக்கும் இந்திய துணைக் கண்டத்துக்கும் சுமார் 2500 ஆண்டுகள் பழமையான தொடர்பு காணப்படுகிறது.

இலங்கை இந்தியா ஒப்பந்தத்தின் பிரகாரம் 13ஆவது திருத்தச் சட்டம் இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட நிலையில் குறித்த சட்டம் நடைமுறைத் தன்மை குன்றியதாகவே காணப்படுகிறது.

ஜே.ஆர் காலத்தில் தமிழ் மக்கள் மீது ஏற்படுத்தப்பட்ட அடக்குமுறை அப்போதைய இந்திய பிரதமர் இந்திராகாந்தியின் கரிசனை இலங்கையில் பதிமூன்றாவது திருத்தத்தை ஏற்படுத்துவதற்கு வழி கோலியது.

சிலர் 13 தமிழ் மக்களுக்கு தீர்வு இல்லை என கூறுகிறார்கள் நானும் 13ஐ முழுமையான தீர்வாக ஏற்றுக் கொள்ளாத நிலையில் இந்தியாவும் இறுதித் தீர்வாகக் கூறவில்லை.

தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கும் 13க்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதால் அதனை ஆரம்ப புள்ளியாக முன்னெடுக்க விரும்பாதவர்கள் அதனை முன்னெடுத்துச் செல்வோருக்கு தடையாக இருக்கக்கூடாது.

தமிழ் கட்சிகள் ஒற்றுமையுடன் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஓரணியில் நின்று இந்தியாவுக்கு தமது நிலைப்பாட்டை எடுக்கக்கூற வேண்டும்.

ஆகவே தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கு ஆரம்பப் புள்ளியாக இருக்கின்ற 13வது திருத்தந்தை உதறித் தள்ளினால் எல்லாமே சூனியமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சிவி விக்னேஸ்வரன், வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரின் செயலாளர் கலாநிதி கந்தையா விக்னேஸ்வரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்,

முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் கஜதீபன் , முன்னாள் வடமாகாண சபை எதிர்கட்சி தலைவர் தவராசா, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: admin