யாழில் விமரிசையாக இடம்பெற்ற இரு நூல்களின் வெளியீட்டுவிழா

மறைந்த பிரபல எழுத்தாளர் குப்பிழான் ஐ.சண்முகனின் ஓர் இலக்கியக்காரனின் வாழ்வனுபவங்கள் மற்றும் அவரது பாரியார் ஓய்வுநிலை ஆசிரியர் திருமதி.புனிதவதி சண்முகனின் ஆனந்தக் கூத்து நாட்டிய நாடகத் தொகுப்பு ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா நேற்று வெள்ளிக்கிழமை (14.07.2023) மாலை-03.30 மணியளவில் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள ராஜா கிறீம் ஹவுஸ் சரஸ்வதி மஹால் மண்டபத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர். எஸ்.சிவலிங்கராஜா தலைமையில் இடம்பெற்றது.


குறித்த நூல்களின் வெளியீட்டு விழா நிகழ்வில் யாழ்.வேலணை மத்திய கல்லூரியின் ஓய்வுநிலை அதிபர் சி.கிருபாகரன் வாழ்த்துரையையும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் கி.விசாகரூபன் நூல் வெளியீட்டுரையையும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களான தி.செல்வமனோகரன், கலாநிதி.கந்தையா ஸ்ரீகணேசன் மற்றும் குருஷேத்திரம் நடனாலய இயக்குனர் கலாபூஷணம். செல்வி. பேரின்பநாயகி சிவகுரு ஆகியோர் நூல் நயப்புரைகளையும் ஆற்றினர்.

நூல்களினை பேராசிரியர் கி. விசாகரூபன் மற்றும் பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா ஆகியோர் வெளியிட்டு வைத்தனர்.  குப்பிழான் ஐ.சண்முகனின் ஓர் இலக்கியக்காரனின் வாழ்வனுபவங்கள் நூலின் முதற் பிரதியினை எழுத்தாளர் ஜேசுராஜா பெற்றுக் கொண்டார். தொடர்ந்து திருமதி.புனிதவதி சண்முகனின் ஆனந்தக் கூத்து நாட்டிய நாடகத் தொகுப்பு நூலின் முதற் பிரதியினை யாழ். உடுப்பிட்டி மகளிர் கல்லூரி பழையமாணவர் சங்க செயலாளரான  ரவீந்திரகுமார் செல்வநாயகி பெற்றுக் கொண்டார்.


தொடர்ந்து உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மாணவிகளின் நல்லூர் துதி, ஆனந்தக் கூத்து ஆகிய நாடக ஆற்றுகைகளும் இடம்பெற்றன. திருமதி.புனிதவதி சண்முகனின் ஏற்புரையினை தொடர்ந்து யாழ் பல்கலை விரிவுரையாளர் அஜந்தகுமாரின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் அனைத்தும் இனிதே நிறைவடைந்தன.

Recommended For You

About the Author: Editor Elukainews