புத்த பகவானுடைய அருமையான கோட்பாடுகள் மீறப்படுகிறது – சுகாஷ் ஆதங்கம்

தையட்டியில் அமைந்துள்ள சட்ட விரோதமான திஸ்ஸ விகாரைக்கு எதிரான தொடர் போராட்டம் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. எமது உணர்வுகளுக்கு மேலும் சுமையும் துன்பங்களும் ஏற்படுத்துகின்ற வகையில் இந்த சிங்கள பௌத்த பேரினவாதம் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் காங்கேசன்துறை திஸ்ஸ விகாரைக்கு அருகாமையில் போராட்டத்தில் ஈடுபட்டவேளை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கவில்லையே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
எங்களுடைய தொடர் போராட்டத்திற்கு சாதகமான பதில் இற்றைவரை பொறுப்பு வாய்ந்த எவரிடம் இருந்தும் எமக்கு கிடைக்கவில்லை. எனவே நமக்கு வேறு மாற்றங்களோ வேறு உபாயங்களோ கிடையாது.
எமது மக்களுடைய எதிர்கால இருப்பை உறுதிப்படுத்துவதற்காகவும், சட்டவிரோத சிங்கள ஆக்கிரமிப்புகளை தடுப்பதற்காகவும் மீண்டும் தையட்டியிலே எங்களது போராட்டத்தை தொடர வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளோம்.
நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்ற விடயம், சிங்கள மக்களையோ பௌத்த மதத்தையோ நாங்கள் வெறுக்கவில்லை. பௌத்தத்தை நாங்கள் நேசிக்கின்றோம் சிங்கள மக்களை நாங்கள் விரும்புகின்றோம். அவர்களுடைய உணர்வுகளை புரிந்து கொள்கின்றோம். நாங்கள் தாழ்மையாக கேட்பது, நாங்கள் எவ்வாறு உங்களை மதிக்கின்றோமோ, உங்களது உணர்வுகளை புண்படுத்தாது செயற்படுகின்றோமோ அதேபோல் நீங்களும் நடந்து கொள்ளுங்கள்.
சிங்கள மக்களே நீங்கள், சட்டவிரோத கட்டடங்களை அகற்றுமாறு அரசுக்கு அழுத்தத்தை கொடுங்கள். ஏனென்றால் தமிழ் மக்கள் எந்த சந்தர்ப்பத்திலும் சிங்கள சகோதரர்களுடைய, பௌத்த மதத்தவர்களுடைய வாழிடத்தை அழித்து அங்கே நாங்கள் எங்களது அடையாளங்களை பதிக்கவில்லை. பதிக்கப் போவதும் இல்லை. ஏனென்றால் நாங்கள் சிங்கள மக்களையும் விரும்புகின்றோம், பௌத்த மத போதனைகளையும் விரும்புகின்றோம்.
ஆனால் இங்கே நடைபெற்றுக் கொண்டிருப்பது புத்த பகவானுடைய அருமையான பௌத்த கோட்பாடுகளும் மீறப்பட்டு, அகிம்சைக்கு முரணாக இராணுவமும், சிங்கள பௌத்த பேரினவாதமும் தமிழ் மக்களுடைய காணிகளை ஆக்கிரமித்து ஒரு சட்ட விரோதமான கட்டடத்தை இங்கே கட்டி இருக்கின்றார்கள். அதற்கு எதிராகத்தான் நாங்கள் தொடர்ந்து போராடி வருகின்றோம். இந்த சட்டவிரோத கட்டடம் அகற்றப்படும் வரை எங்களது போராட்டம் தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் தொடரும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews