யாழ்.வலிகாமம் வடக்கில் காணி பதிவுகளை உடன் நிறுத்துக! குணபாலசிங்கம்.

வலிகாமம் வடக்கில், காணி பதிவுகள் மேற்கொள்வதை உடனடியாக நிறுத்துமாறு, வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற குழுவின் தலைவர் அ. குணபாலசிங்கம் தெரிவித்தார்.

தற்பொழுது இராணுவத்தின் பிடியில் உள்ள காணிகள் தொடர்பில் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், கடந்த 31 வருடங்களாக வலிகாமம் வடக்கில் இராணுவத்தினரின் வசம் உள்ள காணிகள் விடுவிக்கப்படவில்லை என்றார்.

அரசாங்கத்தால் இராணுவம் வசமுள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பதற்காக, அக்காணிகளின் காணிகளின் உரிமையாளர்கள்,

தம்மை பதிவு செய்யுமாறு பல தடவைகள் கோரப்பட்டு, பொதுமக்களும் அவ்வாறு பதிவுகளை மேற்கொண்டிருந்ததாகவும் ஆனால் இன்றுவரை

தமது காணிகள் விடுவிக்கப்படவில்லை எனவும், குணபாலசிங்கம் தெரிவித்தார். ஏற்கெனவே இராணுவத்திடமிருந்து தமது காணியை மீட்பதற்கு 

பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்ததாகத் தெரிவித்த அவர், ஆனால் தற்போது வரை அந்த முயற்சி பயனளிக்கவில்லை எனவும் கூறினார்.

இந்நிலையில், தற்போதைய அரசாங்கத்தாலும், இராணுவத்திடம் காணிகள் உள்ளோர் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், 

பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு இனியும் விவரங்களை சேகரித்து கொண்டிருக்காது,

அந்த விவரம் சேகரிப்பதை தற்காலிகமாக இடைநிறுத்தி, இந்தப் பதிவு நடைமுறையை சற்று பிற்போடுமாறும், அரசாங்கத்தை கோரினார்.

ஏற்கெனவே சேகரிக்கப்பட்ட பொதுமக்களின் காணி விவரங்கள்இராணுவ தளபதி மற்றும் ஏனைய அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு மீண்டும் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கூறுவதன் காரணமாக, பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகிறார்கள் எனவும், அவர் தெரிவித்தார்.

அரசாங்கம் மக்களுக்குரிய காணிகளை விரைவில் விடுவிக்க வேண்டும் எனத் தெரிவித்த அவர், பொதுமக்கள் கடந்த 30 வருடங்களாக

பெரும் சிரமத்தை எதிர்நோக்கி உள்ளார்கள் எனவும் எனவே, பொதுமக்களின் நலன் சார்ந்து பொதுமக்களின் காணிகளை கையளிக்க வேண்டும் எனவும் கோரினார்.

அத்துடன், ‘ஒவ்வொரு வருடமும் ஐ.நா சபையில் அமர்வு ஆரம்பமாகும் போது, ஆட்சியில் உள்ள அரசாங்கமானது, காணி விடுவிப்பு தொடர்பில் சில முன்னெடுப்புகளை

முன்னெடுக்கும். ஆனால் ஐக்கிய நாட்டு சபையின் கூட்டத்தொடர் முடிந்த பின்னர், அது புஷ்வானமாக போய்விடும்.

எனவே இம்முறை இந்த அரசாங்கமானது வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் விடுவிக்கப்படாதுள்ள காணிகளை பொதுமக்களிடம் கையளிக்க வேண்டும் எனவும்,

குணபாலசிங்கம் தெரிவித்தார்

Recommended For You

About the Author: Editor Elukainews